ஐநா சபையின் பருவநிலை மாற்றம் தொடர்பான ஆலோசனை குழுவில் ஒடிசா மாநிலத்தை சேர்ந்த பெண் ஒருவர் இடம்பிடித்துள்ளார்.
உலகளவில் நடந்துவரும் பருவநிலை மாற்றங்கள் தொடர்பான ஆலோசனைகளை வழங்க ஐ.நா. சபை சார்பில் கடந்த 27-ம் தேதி ஆறு பேர் கொண்ட புதிய குழு ஒன்று உருவாக்கப்பட்டது. இதில் ஒடிசாவைச் சேர்ந்த அர்ச்சனா சோரங் இடம்பிடித்துள்ளார். ஒடிசாவின் ரூர்கேலா பகுதியைச் சேர்ந்த அர்ச்சனா, பாட்னா மகளிர் கல்லூரியில் பி.ஏ. அரசியல் அறிவியல் பட்டம் பெற்றுள்ளதோடு, கடந்த பல ஆண்டுகளாக பருவநிலை மாற்றம் தொடர்பான விழிப்புணர்வு செயல்பாடுகளிலும் ஈடுபட்டு வருகிறார். தற்போது மும்பையில் உள்ள டாடா இன்ஸ்டிடியூட் ஆப் சோஷியல் சயின்ஸ் அமைப்பில் ஒடிசா பகுதி ஆராய்ச்சியாளராக பணியாற்றி வரும் அர்ச்சனா, ஐநா சபையின் பருவநிலை மாற்றம் தொடர்பான ஆலோசனை குழுவில் உறுப்பினராக இணைக்கப்பட்டுள்ளார்.