
மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்தவர் ராகேஷ். இவரது மனைவி கெளரி அனில் சாம்பேகர்(32). ராகேஷ் ஒரு தனியார் நிறுவனத்தில் மேலளாராக பணிபுரிந்து வருகிறார். கெளரி பட்டப்படிப்பு முடித்துவிட்டு வீட்டை கவனித்து வந்துள்ளார். இந்த நிலையில், கடந்த 2 மாதங்களுக்கு முன்பு இந்த தம்பதி, பெங்களூருவுக்கு வந்து குடியேறினர்.
பெங்களூருவுக்கு வந்த இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்த தகராறில், ராகேஷை கெளரி உடல் ரீதியாக தாக்கியதாகக் கூறப்படுகிறது. இந்த சூழ்நிலையில், கடந்த 26ஆம் தேதி வழக்கம்போல் இருவருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த ராகேஷ், தனது மனைவி கெளரியின் வயிற்றில் கத்தியால் குத்தினார். மேலும், கெளரியின் கழுத்தை அறுத்து கொடூரமாகக் கொலை செய்தார்.
இதையடுத்து, தனது மனைவி கெளரியின் உடலை ஒரு சூட்கேஸில் அடைத்து வீட்டில் உள்ள குளியலறையில் விட்டுவிட்டு அங்கிருந்து பூனேவுக்கு தப்பிச் சென்றார். அதன் பின்னர், தான் செய்த கொலை குற்றத்தை கெளரியின் பெற்றோரிடம் ராகேஷ் தெரிவித்தார். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர், உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்த காவல்துறையினர், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து வீட்டுக் கதவை உடைத்து உள்ளே சென்றனர். அங்கு, குளியலறையில் இருந்த சூட்கேஸில் கெளரியின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதனையடுத்து, கொலை செய்துவிட்டு தப்பிச் சென்ற ராகேஷை, பிடிப்பதற்கு போலீசார் தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டு வந்தனர். அவரது இருப்பிடத்தை டிராக் செய்த போலீசார், அவர் சதாரா பகுதியில் இருப்பதை கண்டுபிடித்தனர். அதன்படி அங்கு விரைந்த போது, கார் ஒன்றில் மயக்கமடைந்த நிலையில் ராகேஷ் இருந்துள்ளார். தப்பிச் சென்ற ராகேஷ் விஷம் சாப்பிட்டதால், அவரை உடனடியாக மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையில், அவரை போலீசார் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.