
கர்நாடகா மாநிலத்தில் முதல்வராக சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. இம்மாநிலத்தில், துணை முதல்வராக டி.கே.சிவகுமார் பதவி வகித்து வருகிறார். இந்த மாநிலத்தில் அண்மை காலமாக பெண்களை வைத்து பணம் பறிக்கும் முயற்சியான ஹனி டிராப் என்ற செயல் அதிகரித்து வருகிறது. இந்த செயலில், தொழிலதிபர்கள், அரசியல்வாதிகள், மூத்த அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள் பலர் சிக்கியுள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்த சூழலில், கர்நாடகா சட்டப்பேரவையில் பேசிய கூட்டறவுத்துறை அமைச்சர் கே.என்.ராஜண்ணா, கர்நாடகாவில் 48 எம்.எல்.ஏக்கள் ஹனி டிராப்பில் சிக்கியுள்ளதாவும், தன்னையும் சிக்க வைக்க முயற்சி நடப்பதாகவும் கூறியிருந்தார். இந்த ஹனி டிராப்பில் சிக்கிய 48 எம்.எல்.ஏக்களின் முக்கிய விஷயங்கள் அடங்கிய பென் டிரைவும், சிடியும் உள்ளதாகவும் அவர் தெரிவித்திருந்தார். இவரது பேச்சு மாநிலத்தில் பெரும் புயலை கிளப்பி வருகிறது. எம்.எல்.ஏக்களை சிக்க வைக்கும் ஹனி டிராப் வழக்கு குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், கர்நாடகா அமைச்சர் கே.என்.ராஜண்ணாவின் மகனும், காங்கிரஸ் எம்.எல்.சியுமான ராஜேந்திர ராஜண்ணா, தன்னை கொலை செய்ய முயற்சி நடப்பதாக போலீசில் பரபரப்பு புகார் ஒன்றை அளித்துள்ளார். ஹனி டிராப் பிரச்சனையை தொடர்ந்து குரல் எழுப்பி வந்த ராஜேந்திர ராஜண்ணா, தற்போது போலீசில் புகார் அளித்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “எனக்கு எதிராக நடத்தப்பட்ட கொலை முயற்சி தொடர்பான தகவல்களைப் பகிர்ந்து கொள்ள கர்நாடக டிஜிபி மற்றும் ஐஜிபி ஆகியோரை சந்தித்தேன். எனது தந்தை மீது நடந்ததாகக் கூறப்படும் ஹனி டிராப் முயற்சி குறித்து மாநில காவல்துறையின் குற்ற புலனாய்வுத் துறை அதிகாரிகள் முதற்கட்ட விசாரணையை தொடங்கியுள்ளனர். ஹனிட்ராப் வழக்கு சிஐடியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக நான் நம்புகிறேன். ஜெயமஹால் சாலையில் எனக்கு ஒதுக்கப்பட்ட அரசு இல்லத்திற்கு சிஐடியினர் சென்று ஊழியர்களிடம் விசாரித்தனர். அவர்கள் முதற்கட்ட விசாரணையைத் தொடங்கியுள்ளனர், இதுதான் எனக்குக் கிடைத்த தகவல்” என்று தெரிவித்தார்.
முன்னதாக ராஜேந்திர ராஜண்ணாவின் தந்தை, அமைச்சர் கே.என்.ராஜண்ணா, மாநில உள்துறை அமைச்சர் பரமேஸ்வராவிடம், ஹனி டிராப் மூலம் தன்னை தவறாகப் பயன்படுத்தப்பட்ட முயற்சிகள் குறித்து விசாரணை நடத்தி தேவையான நடவடிக்கை எடுக்கக் கோரி மனு ஒன்றை அளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.