உத்திரபிரதேச மாநிலம் பாரபங்கி அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்தவர் சந்திர பிரகாஷ் மிஸ்ரா (35). இவரது மனைவி சாபி. மிஸ்ராவுக்கு திருமணமாகாத தங்கை ஒருவர் இருந்தார்.
இந்த நிலையில், மிஸ்ராவின் தங்கைக்கு வருகிற 26ஆம் தேதி திருமணம் நடைபெற இருந்தது. தன் தங்கையின் திருமணத்திற்காக தங்க மோதிரம், டி.வி உள்ளிட்ட பொருட்களை வழங்க மிஸ்ரா விருப்பப்பட்டார். இந்த முடிவை மிஸ்ரா தனது மனைவி சாபியிடம் தெரிவித்துள்ளார். ஆனால், அதற்கு சாபி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதனால், இவர்கள் இருவருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இதில் ஆத்திரமடைந்த சாபி, தனது கணவரை பழிவாங்க வேண்டும் என்பதற்காக தனது சகோதர்களை அழைத்ததாகக் கூறப்படுகிறது. அதன் பேரில், அங்கு வந்த அவர்கள், இது குறித்து மிஸ்ராவிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். ஆனால், அந்தப் பேச்சுவார்த்தை ஒரு கட்டத்தில் தகராறில் முடிந்துள்ளது. இதில், சாமியின் சகோதரர்கள், மிஸ்ராவை கம்பு உள்ளிட்ட ஆயுதங்களால் கடுமையாகத் தாக்கியுள்ளனர். இதில் மிஸ்ரா படுகாயமடைந்ததால் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
இதனையடுத்து, இந்தச் சம்பவம் குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் மிஸ்ராவை கொலை செய்த மனைவி சாபி உள்ளிட்ட 5 பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.