Published on 06/05/2020 | Edited on 06/05/2020
ஊரடங்கால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு சிரமத்திற்கு ஆளாகியுள்ள மக்களின் கைகளில் பணத்தைக் கொடுங்கள் என்று நாங்கள் கேட்கிறோம், ஆனால் மத்திய அரசு பெட்ரோல், டீசலுக்கு கலால் வரியை உயர்த்தி மக்களிடம் இருந்து பணத்தை எடுக்கிறது என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் மத்திய அரசை சாடியுள்ளார்.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலை கடுமையான சரிவை சந்தித்துள்ள இந்த சூழலில், பெட்ரோல் மற்றும் டீசல் மீதான சாலை செஸ் வரி கட்டணத்தை லிட்டருக்கு ரூ .8 அதிகரித்துள்ளது மத்திய அரசு. மேலும் பெட்ரோலுக்கு லிட்டருக்கு ரூ .2 மற்றும் டீசலுக்கு ரூ .5 என கலால் வரியும் உயர்த்தப்பட்டுள்ளது. எனவே பெட்ரோல் விலையில் லிட்டருக்கு ரூ.10, டீசல் விலையில் லிட்டருக்கு ரூ.13 வரியாக விதிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் இந்த இரண்டு எரிபொருட்களின் பம்ப் விலையில் 69 சதவீதம் வரியாகவே பெறப்படுகிறது. இதன்மூலம் உலகிலேயே பெட்ரோல், டீசலுக்கு அதிக வரி விதிக்கும் நாடாக இந்தியா மாறியுள்ளது. ஆனால் மத்திய அரசு, எண்ணெய் நிறுவனங்கள் இந்த வரியை கட்டவேண்டும் என்பதால் மக்கள் மீது வரிசுமை சுமத்தப்படாது என தெரிவித்தாலும், எதிர்காலத்தில் இது மக்கள் மீதே சுமத்தப்படும் என விமர்சனங்கள் எழுந்து வருகின்றன. இந்நிலையில் இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள ப.சிதம்பரம், "மத்திய அரசு தனது நிதிப்பாற்றுக்குறையை குறைக்கக் கடன் வாங்க வேண்டும். கரோனா வைரஸால் லாக்டவுனில் பொருளாதாரம் சரிந்து கிடக்கும் இந்த சூழலில் அதிகமான வரிகளை விதிக்கக்கூடாது.
பொருளாதார வளர்ச்சி நல்ல நிலையில், உச்சத்தில் இருக்கும் போதுதான் புதிய வரி விதிக்கலாம், வரியை உயர்த்தலாம். ஆனால் இப்போது வரிவிதிப்பது கொடூரமானது. ஏற்கெனவே லாக்டவுனால் பெரும் துன்பத்தில் உள்ள நடுத்தர மக்கள், ஏழைகளை இந்த வரிச்சுமை மேலும் வேதனைப்படுத்தும், ஏழ்மையில் தள்ளும்
நாட்டு மக்கள் தொகையில் பாதிப்பேருக்குப் பணத்தை நேரடியாக வழங்கிடுங்கள் என்று மத்திய அரசை தொடர்ந்து மன்றாடி வருகிறோம். ஆனால், மத்திய அரசோ மக்களுக்குப் பணத்தை வழங்குவதற்குப் பதிலாக அவர்களிடம் இருந்தே பணத்தை எடுக்கிறது, கொடுமை...” எனத் தெரிவித்துள்ளார்.