
பாலியல் வன்கொடுமை செய்த கல்லூரி பெண்ணை, மதமாற்றம் செய்யுமாறு அழுத்தம் கொடுத்தாக 23 வயது நபர் மீது வழக்கு போடப்பட்டுள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலம், பல்லியா நகரத்தில் ஹர்தியா ஜாமின் கிராமத்தைச் சேர்ந்தவர் அசாத் அன்சாரி (23). இவர், கல்லூரியில் முதலாம் ஆண்டு படிக்கும் 19 வயது கல்லூரி மாணவி ஒருவரிடம் வேலை வாங்கி வருவதாகக் கூறியுள்ளார். இதனை நம்பிய அந்த மாணவியை, கடந்தாண்டு டிசம்பர் 17ஆம் தேதி ஒரு ஹோட்டலுக்கு அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். அந்த சம்பவத்தை, அசாத் தனது மொபைல் போனில் வீடியோவாக எடுத்துள்ளார்.
இதனை தொடர்ந்து, கடந்த மார்ச் 11ஆம் தேதி பாதிக்கப்பட்ட இளம்பெண் தனது தேர்வு முடிவுகளை சரிபார்க்க கல்லூரிக்குச் சென்றார். அப்போது அசாத், அந்த பெண்ணை மிரட்டி மும்பைக்கு அழைத்துச் சென்றதாகக் கூறப்படுகிறது. அங்கு, இஸ்லாம் மதத்திற்கு மதம் மாறி தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தியதாகக் கூறப்படுகிறது. இதனையடுத்து பாதிக்கப்பட்ட பெண், தனக்கு நேர்ந்த கொடுமைகள் குறித்து போலீசில் புகார் அளித்தார்.
அந்த புகாரின் அடிப்படையில், அசாத் மீது பாரதிய நியாய சன்ஹிதா மற்றும் உத்தரப் பிரதேச சட்டவிரோத மதமாற்றத் தடைச் சட்டத்தின் பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், பாதிக்கப்பட்ட பெண்ணை மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பப்பட்டு, இச்சம்பவம் குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.