
நாடாளுமன்றத்தில் உள்ள இரு அவைகளிலும் பட்ஜெட் மீதான கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தொடரின் போது, மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா நேற்று முன் தினம் (26-03-25) பேசியதாவது, “உறுப்பினர்களின் நடத்தை இந்த அவைக்கு ஏற்றத்தகாத வகையில் பல புகார்கள் எனது கவனத்திற்கு வந்துள்ளன. இந்த அவை தந்தை-மகள், தாய்-மகள் மற்றும் கணவன்-மனைவியை உறுப்பினர்களாகக் கண்டுள்ளது. இந்தச் சூழலில், எதிர்க்கட்சித் தலைவர் அவையில் விதி 349 இன் படி நடந்து கொள்வார் என்று நான் எதிர்பார்க்கிறேன். மீண்டும் ஒருமுறை சொல்கிறேன், எதிர்க்கட்சித் தலைவர் இதனை கருத்தில் கொள்ள வேண்டும்” என்று கூறினார்.
அதனை தொடர்ந்து, ராகுல் காந்தி பேச முயன்றார். ஆனால், சபாநாயகர் ஓம் பிர்லா அதற்கு அவையில் இருந்து புறப்பட்டுச் சென்றார். இவரது பேச்சு, எதிர்க்கட்சியான காங்கிரஸ் உறுப்பினர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
இதனையடுத்து, அவை முடிந்ததும் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய ராகுல் காந்தி, “என்ன நடக்கிறது என்பதே எனக்கு தெரியவில்லை. நான் பேசுவதற்கு அனுமதி கேட்டேன். ஆனால், அதற்கு சபாநாயகர் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றுவிட்டார்.
இது சபையை நடத்துவதற்கான வழி அல்ல. அவர் என்னைப் பேச விடவில்லை. அவர் என்னைப் பற்றி ஆதாரமற்ற ஒன்றைச் சொன்னார்.
நான் எழுந்து நிற்கும் போதெல்லாம், எனக்குப் பேச அனுமதி இல்லை. நாங்கள் சொல்ல விரும்புவதைச் சொல்ல எங்களுக்கு அனுமதி இல்லை. நான் எதுவும் செய்யவில்லை. நான் அமைதியாக அமர்ந்திருந்தேன். நான் ஒரு வார்த்தை கூட பேசவில்லை. 7, 8 நாட்களாக எனக்குப் பேச அனுமதி இல்லை. இது ஒரு புதிய தந்திரம். எதிர்க்கட்சிக்கு இடமில்லை. அன்று, பிரதமர் கும்பமேளா பற்றிப் பேசினார், நான் வேலையின்மை பற்றிப் பேச விரும்பினேன், ஆனால் எனக்கு அனுமதி கிடைக்கவில்லை. சபாநாயகரின் அணுகுமுறை என்னவென்று எனக்குத் தெரியவில்லை, ஆனால் எங்களுக்குப் பேச அனுமதி இல்லை. இது ஜனநாயக விரோதமான செயல்பாட்டு முறை” என்று கூறி சபாநாயகருக்கு எதிராக குற்றச்சாட்டை முன்வைத்தார்.

கூட்டத்தொடரின் போது, எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, தனது சகோதரியான வயநாடு எம்.பி பிரியங்கா காந்தியின் கன்னத்தை விளையாட்டாக கிள்ளினார். இது தொடர்பான வீடியோவை, பா.ஜ.க தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டு ராகுல் காந்தியை சபாநாயகர் இதற்காக தான் சாடினார் என்று கூறி வருகிறது. இதற்கிடையில், இது தொடர்பாக காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி கட்சிகளின் எம்.பிக்கள், சபாநாயகரை சந்தித்து மனு ஒன்றை அளித்துள்ளனர்.