2000 ரூபாய் நோட்டுகளை மத்திய அரசு திரும்ப பெற போவதாக சமூகவலைதளங்களில் செய்திகள் பரவி வருவது குறித்து மத்திய அமைச்சர் விளக்கம் அளித்துள்ளார்.
மக்களவையில் இன்று பேசிய சமாஜ்வாதிக் கட்சியின் எம்.பி. விஷம்பர் பிரசாத் நிஷாத், "2 ஆயிரம் ரூபாய் நோட்டு அறிமுகப்படுத்தப்பட்டதில் இருந்து கறுப்புப்பணம் புழக்கம் அதிகரித்துள்ளது. ஆதலால், 2 ஆயிரம் ரூபாய் நோட்டை மத்திய அரசு விரைவில் வாபஸ் பெற்று, மீண்டும் பழையபடி ஆயிரம் ரூபாய் நோட்டை அறிமுகப்படுத்த உள்ளது என மக்கள் மத்தியில் தகவல்கள் பரவுகிறது. இதுகுறித்து விளக்க வேண்டும்" எனத் தெரிவித்தார்.
இதற்கு பதிலளித்த மத்திய நிதித்துறை இணையமைச்சர் அனுராக் தாக்கூர், "பணமதிப்பிழப்பு குறித்து மக்கள் மத்தியில் அச்சம் இருக்கிறது. ஆனால் இதுகுறித்து யாரும் கவலைப்படத் தேவையில்லை. மத்திய அரசு 2 ஆயிரம் ரூபாய் நோட்டை திரும்பப் பெறும் திட்டம் ஏதும் இல்லை. அதேசமயம், சந்தையில் இருந்து பெறப்பட்ட ஆயிரம் ரூபாய் நோட்டை மீண்டும் அறிமுகப்படுத்தும் எண்ணமும் இல்லை. மனமதிப்பிழப்பின் நோக்கத்தை அது அடைந்துள்ளது. கறுப்புப்பணத்தை ஒழித்தல், கள்ள நோட்டை ஒழித்தல், தீவிரவாதத்துக்கு நிதி செல்வதைத் தடுத்தல் ஆகியவையே பணமதிப்பிழப்பின் முக்கிய நோக்கமாகும். அதில் அது வெற்றி பெற்றுள்ளது" என தெரிவித்தார்.