ஈரான் - அஜர்பைஜான் எல்லையில் நடைபெற்ற அணை திறப்பு விழா ஒன்றில் பங்கேற்றுவிட்டு ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி ஹெலிகாப்டரில் திரும்பி உள்ளார். அப்போது இந்த ஹெலிகாப்டர் ஜோல்ஃபா பகுதியில் உள்ள அடர்ந்த வனம் மற்றும் மலைப் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது விபத்தில் சிக்கியதாக கூறப்பட்டது. இதனையடுத்து மீட்புப் பணிகள் நடைபெற்றன. அதே சமயம் ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியவர்கள் உயிர் பிழைத்திருக்க வாய்ப்பில்லை என ஈரான் ஊடகங்கள் தெரிவித்திருந்தன.
இந்நிலையில் ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்ததாக அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஈரானில் உள்ள புனித தலமான இமாம் ரேஸாவில் வைத்து அந்நாட்டு மக்களுக்கு அதிபர் இப்ராஹிம் ரைசியின் உயிரிழப்பு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இந்த விபத்து நடந்து சுமார் 17 மணி நேரத்திற்கு பிறகு ஹெலிகாப்டரின் உடைந்த பாகங்கள் கண்டறியப்பட்டன. வனப்பகுதியில் நிலவிவந்த மூடுபனி காரணமாக ஹெலிகாப்டர் விபத்து ஏற்பட்டிருக்கலாம் எனக் கூறப்படுகிறது.
மேலும் இந்த விபத்தில் சிக்கிய ஹெலிகாப்டரில் ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி உடன் அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் ஹொசைன், கிழக்கு அஜர்பைஜான் மாகாண ஆளுநர் மாலேக் ரஹ்மதி மற்றும் பல்வேறு உயர் அதிகாரிகள் இருந்தனர். இவர்களும் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. இச்சம்பவம் உலக அளவில் அதிர்வலையை எற்படுத்தியுள்ளது. இந்நிலையில் ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி மறைவுக்கு பலரும் இரங்கலை தேரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் பிரதமர் மோடி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “ஈரான் இஸ்லாமியக் குடியரசின் தலைவர் டாக்டர் செயத் இப்ராஹிம் ரைசியின் மறைவால் ஆழ்ந்த வருத்தமும் அதிர்ச்சியும் அடைந்தேன். இந்தியா - ஈரான் இருதரப்பு உறவை வலுப்படுத்த மேற்கொண்ட அவரது பங்களிப்பு எப்போதும் நினைவுகூறப்படும். அவரது குடும்பத்தினருக்கும் ஈரான் மக்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். இந்தத் துயரமான நேரத்தில் இந்தியா ஈரானுடன் துணை நிற்கிறது” எனக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் ஈரான் நாட்டின் புதிய அதிபராகத் துணை அதிபர் பொறுப்பேற்க உள்ளார் என்ற தகவலும் வெளியாகியுள்ளது. ஈரானின் அரசியலமைப்பு சட்டப்படி, அந்நாட்டின் அதி உயர் தலைவர் ஆயத்துல்லா அலி காமனெயி இது தொடர்பாக உரிய அனுமதி அளித்தால், துணை அதிபர் முகமது மொக்பர் அதிபர் பொறுப்பை ஏற்பார் எனத் தகவல் வெளியாகியுள்ளது.