Skip to main content

"உடனடி பேச்சுவார்த்தை தேவை" - மத்திய அரசுக்கு பஞ்சாப் முதல்வர் கோரிக்கை...

Published on 27/11/2020 | Edited on 27/11/2020

 

amarinder singh urges center to initiate immediate talks to farmers

 

விவசாயிகள் பிரச்சனையைத் தீர்க்க உடனடியாக மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங் கோரிக்கை வைத்துள்ளார். 

 

மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள், தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். விவசாயிகளின் போராட்டத்திற்குக் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளும் ஆதரவு தெரிவித்துள்ளனர். இந்த நிலையில், புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் மேற்கொண்டுள்ள 'டெல்லி சலோ' பேரணி டெல்லியை அடைந்துள்ளது. 

 

இந்த விவசாயிகள் பேரணி ஹரியானா மாநிலத்திலிருந்தபோது, இது முன்னேறாமல் இருக்கும் வகையில் காவல்துறையினர், எல்லையில் கூடியிருந்த விவசாயிகள் மீது கண்ணீர்ப் புகை குண்டு வீசியும் தண்ணீரைப் பீய்ச்சி அடித்தும் கூட்டத்தைக் கலைத்தனர். அதேநேரம் பேரணியைத் தடுப்பதற்காக, பா.ஜ.க ஆளும் ஹரியானா மாநில எல்லையில் போலீஸார் குவிக்கப்பட்டதோடு, அப்பகுதியில் ஊரடங்கு உத்தரவும் போடப்பட்டது. இந்நிலையில், இன்று டெல்லி எல்லையிலும் பேரணியைத் தடுக்க, ஹரியானா- டெல்லி மாநில எல்லைகளை சீல் வைத்துக் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டது.

 

ஆனால், காவல்துறையினர் மற்றும் விவசாயிகள் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தையின் முடிவில், விவசாயிகள் டெல்லிக்குள் நுழைய காவல்துறையினர் அனுமதியளித்துள்ளனர். மேலும், புராரி பகுதியில் அமைந்துள்ள மைதானத்தில் அமைதியான முறையில் இந்தப் போராட்டத்தை மேற்கொள்ளவும் அவர்களுக்கு அனுமதி வழக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், விவசாயிகளை டெல்லிக்குள் நுழைய அனுமதித்ததற்கு பஞ்சாப் முதல்வர் நன்றி தெரிவித்துள்ளதோடு, உடனடியாக மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளார். 

 

இதுகுறித்துப் பேசியுள்ள அவர், "விவசாயிகள் தங்கள் ஜனநாயக உரிமைப்படி போராடுவதற்கு அவர்களை டெல்லிக்குள் அனுமதித்த மத்திய அரசின் முடிவை, நான் வரவேற்கிறேன். வேளாண் சட்டங்கள் குறித்த விவசாயிகளின் கவலைகளை நிவர்த்தி செய்வதற்கும், தீவிரமடைந்துவரும் இந்தப் பிரச்சனையைத் தீர்ப்பதற்கும் மத்திய அரசு உடனடியாக அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்" எனத் தெரிவித்துள்ளார். 

 

 

 

சார்ந்த செய்திகள்