தமிழக-கர்நாடக எல்லையில் மேகதாது அணை கட்டுவது தொடர்பாக கர்நாடக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதேபோல் தமிழக அரசு சார்பிலும் மேகதாது அணைக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருவதோடு, தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் அண்மையில் மத்திய நீர்வளத் துறை அமைச்சரைச் சந்தித்து இது தொடர்பாகப் பேசியிருந்தார்.
அதைத்தொடர்ந்து காவிரியில் மேகதாது அணைக் கட்டுவதில் கர்நாடக அரசு உறுதியாக இருப்பதாகக் கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை தெரிவித்திருந்தார். இதில் எவ்வித சமரசத்திற்கும் இடம் இல்லை என்றும் அவர் தெரிவித்திருந்த நிலையில், மேகதாது அணை விவகாரம் குறித்து மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்தை கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை கடந்த 25 ஆம் தேதி நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
இந்நிலையில் கர்நாடக அரசு மேகதாதுவில் அணை கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து புதுச்சேரி சட்டப்பேரவையில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேகதாதுவில் அணை கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து புதுச்சேரி சட்டப்பேரவையில் புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி தீர்மானத்தை முன்மொழிந்தார். அந்த தீர்மானத்தில், மேகதாதுவில் அணை கட்டினால் காரைக்காலுக்கு கிடைக்கும் 7 டிஎம்சி தண்ணீர் கிடைக்காது. எனவே மேகதாதுவில் அணை கட்ட அனுமதிக்கக் கூடாது என மத்திய அரசுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. காவிரி மேலாண்மை கூட்டத்தில் மேகதாது அணை குறித்த விவாதம் எடுத்துக் கொள்ளக் கூடாது என்றும் தீர்மானத்தில் முன்மொழியப்பட்டுள்ளது.