கடந்த 2019 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 14 ஆம் தேதி காஷ்மீர் மாநிலத்தின் புல்வாமா பகுதியில் ராணுவ வாகனத்தில் சென்று கொண்டிருந்த சிஆர்பிஎஃப் வீரர்கள் மீது பயங்கரவாதிகள் தற்கொலைப் படைத் தாக்குதல் நடத்தினர். இதில் 40 சிஆர்பிஎஃப் வீரர்கள் கொல்லப்பட்டனர். இது இந்தியா முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இந்நிலையில், ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் முன்னாள் ஆளுநர் சத்யபால் மாலிக் தனியார் செய்தி நிறுவனத்திடம் அளித்த பேட்டியில், “மத்திய ரிசர்வ் போலீஸ் படை (CRPF) வீரர்களின் மீதான தாக்குதல் மத்திய உள்துறை அமைச்சகத்தின் திறமையின்மையின் காரணமாகவே ஏற்பட்டது. அப்போது மத்திய உள்துறை அமைச்சராக இருந்தவர் ராஜ்நாத் சிங். ராணுவ வீரர்களை அழைத்துச் செல்வதற்கு மத்திய உள்துறை அமைச்சகத்திடம் இருந்து விமானம் கேட்கப்பட்டது. ஆனால், மத்திய உள்துறை அமைச்சகம் விமானத்தை தர மறுத்து சாலை மார்க்கமாக செல்லும்படி உத்தரவிட்டது. இதன் காரணமாகவே சிஆர்பிஎஃப் வீரர்கள் சாலை மார்க்கமாக சென்றார்கள்.
சாலை மார்க்கமாக அவர்கள் சென்ற போதும் அவர்களுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் திறம்படச் செய்யப்படவில்லை. அன்று மாலையே பிரதமரிடம் இது குறித்து கூறினேன். ‘இது நம் தவறு. விமானம் வழங்கப்பட்டு இருந்தால் இது நடந்திருக்காது’ என்று தெரிவித்தேன். ஆனால், பிரதமர் ‘இது குறித்து வெளியில் யாரிடமும் கூற வேண்டாம்’ என்றும் அமைதியாக இருக்கும்படியும் கூறினார். தேசிய பாதுகாப்பு செயலாளரும் அமைதியாக இருக்கும்படி கூறினார். வெடி மருந்துகளுடன் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் வந்த வாகனம் 10 முதல் 12 நாட்கள் சுற்றித் திரிந்ததை உளவுத்துறையினர் சரிவர கவனிக்கவில்லை. இது உளவுத்துறையினர் தோல்வி” எனக் கூறியிருந்தார். இது இந்தியா முழுவதும் பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது. மேலும் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகின்றன.
இந்த நிலையில் நேற்று டெல்லியில் காங்கிரஸ் கட்சியின் பத்திரிகையாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. அதில் பேசிய காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஓய்வு பெற்ற கர்னல் ரோகித் சவுத்ரி மற்றும் விங் கமாண்டர் அனுமா ஆச்சார்யா, “புல்வாமாவில் நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பாக வெளியாகியுள்ள செய்திகள் பாதுகாப்பு துறையினருக்கும், ஒட்டுமொத்த நாட்டிற்கும் கவலையாக இருக்கிறது. ஒரு பயங்கரவாத தாக்குதல் நடத்தப்படலாம் என்று 2019 ஆம் ஆண்டு ஜனவரி 2 ஆம் தேதிக்கும், பிப்ரவரி 13 ஆம் தேதிக்கும் இடையில் அளிக்கப்பட்ட உளவுத்துறை எச்சரிக்கைகள் புறக்கணிக்கப்பட்டது ஏன்? தெற்கு காஷ்மீரில் பலத்த பாதுகாப்பு இருந்தபோதும் பயங்கரவாதிகளால் 300 கிலோ வெடிபொருட்களைப் பெற முடிந்தது எப்படி? தாக்குதல் நடத்தப்பட்டு நான்கு ஆண்டுகள் கடந்தும், இது குறித்த விசாரணையில் என்ன முன்னேற்றம் கண்டுள்ளது. இந்த விசாரணை முடிந்து, ஏன் தாக்குதல் நடத்தப்பட்டது? எப்படி நடத்தப்பட்டது? இந்த விஷயத்தில் உள்துறை அமைச்சகம், பாதுகாப்பு அமைச்சகம், தேசியப் பாதுகாப்பு ஆலோசகர், பிரதமர் அலுவலகத்தின் பங்கு என்ன? என்பது குறித்து மத்திய அரசு தெளிவான வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்” என்றனர்.