மத்திய அரசைக் கண்டித்து ஐஎன்டியூசி, சிஐடியூ, எச்எம்எஸ், தொமுச உள்ளிட்ட 10 தொழிற்சங்கங்கள் சார்பில் நாடு முழுவதும் வேலை நிறுத்தம் நடைபெற்று வருகிறது.
பொதுத்துறை நிறுவனங்கள் தனியார் மயம், நிலக்கரி துறையில் 100% நேரடி அந்நிய முதலீடுக்கு மத்திய தொழிற்சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், தற்போது நாடு தழுவிய வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன. இதற்கு பல்வேறு கட்சிகளும் ஆதரவு தெரிவித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
கேரளாவில் அனைத்து தொழிற்சங்கங்களும் ஆதரவால் அரசு பேருந்துகள் நள்ளிரவு 12 மணி முதல் இயங்கவில்லை. கேரளா செல்லும் தமிழக அரசு பேருந்துகள் மாநில எல்லையான களியக்காவிளையில் நிறுத்தப்பட்டுள்ளன. அதேபோல் கேரளாவிற்குள் இயக்கப்படும் தமிழக அரசு பேருந்துகள் தமிழக எல்லையான குமுளியில் நிறுத்தப்பட்டுள்ளன.
புதுச்சேரி மாநிலத்தில் பெரும்பாலான பேருந்துகள், டெம்போக்கள் ஓடவில்லை. தமிழகத்தில் தனியார் பேருந்துகள் இயக்கப்படாததால் பெரும்பாலான தனியார் பள்ளிகள் இன்று (08.01.2020) விடுமுறை அறிவித்துள்ளன. மேலும் மிகக் குறைந்த அளவில் தமிழக அரசு பேருந்துகள் போலீஸ் பாதுகாப்புடன் இயக்கப்படுகின்றன.
இதனிடையே தூத்துக்குடி துறைமுக பகுதியில் வேலை நிறுத்தத்திற்கு ஆதரவாக அனைத்து தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
நாடு முழுவதும் நடைபெற்று வரும் வேலை நிறுத்தத்தால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.