ராஜீவ் படுகொலையில் ஆயுள் தண்டனை பெற்று சிறையில் இருக்கும் 7 பேர் விடுதலை குறித்து, தமிழக அரசின் அமைச்சரவை தீர்மானத்தின் மீது, முடிவு எடுக்காமல் கடந்த 2 வருடங்களாகக் காலதாமதம் செய்தபடி இருக்கிறார் தமிழக கவர்னர் பன்வாரிலால்!
இந்தக் காலதாமதம் குறித்து தனது அதிருப்தியை உச்சநீதிமன்றம் தெரிவித்திருந்தது. கவர்னர் மீது உச்சநீதிமன்றம் தெரிவித்த அதிருப்தி, தேசிய அளவில் பரபரப்பானது. இந்த நிலையில், டெல்லிக்கு அழைக்கப்பட்டார் கவர்னர். இதனடிப்படையில், மூன்று நாள் பயணமாக டெல்லி சென்றுள்ள கவர்னர், பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரை சந்தித்துள்ளார். அந்தச் சந்திப்பில், தமிழகத்தின் முக்கியப் பிரச்னைகள் குறித்து கவர்னரிடம் மோடியும் அமித் ஷாவும் ஆலோசித்தனர்.
இந்த ஆலோசனையில், 7 பேர் விடுதலை குறித்து முக்கியமாக விவாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், ராஜீவ் காந்தி கொலை வழக்கினை சி.பி.ஐ விசாரித்ததால், மத்திய உள்துறை அமைச்சகம் தடையில்லாச் சான்று அளிக்க முடிவு செய்திருப்பதாகத் தெரிகிறது. தடையில்லாச் சான்று குறித்து சி.பி.ஐயின் கருத்தைக் கேட்கலாம் என அமித்ஷா விவரித்ததை மோடி ஏற்றுக்கொண்டதாகவும், இதனையடுத்து சி.பி.ஐ.யின் கருத்தை மத்திய உள்துறை கேட்டிருப்பதாகவும் டெல்லி தகவல்கள் தெரிவிக்கின்றன.
மத்திய உள்துறை அமைச்சகத்தின் அனுமதியும், சி.பி.ஐ.யின் தடையில்லாச் சான்றிதழும் கிடைக்கவிருப்பதால் பேரறிவாளன் உள்ளிட்டவர்கள் விரைவில் விடுதலையாக வாய்ப்பு இருக்கிறது என்கின்றன உளவுத்துறை வட்டாரங்கள்.