டிஜிட்டல் இந்தியா திட்டத்தைப் பிரதமர் நரேந்திர மோடி, கடந்த 2015ஆம் ஆண்டு இதேநாளில் அறிமுகப்படுத்திவைத்தார். இன்று (01.07.2021) இந்த திட்டம் தொடங்கப்பட்டு ஆறு ஆண்டுகள் நிறைவடைவதையொட்டி, டிஜிட்டல் இந்தியாவின் பயனாளர்களுடன் பிரதமர் மோடி காணொளி வாயிலாக உரையாடினார்.
இந்த உரையாடலின்போது, டிஜிட்டல் இந்தியா என்பது இந்தியாவினுடைய பலத்தின் முழக்கம் என தெரிவித்தார். டிஜிட்டல் இந்தியா பயனாளர்களுடன் உரையாடியபோது பிரதமர் மோடி பேசிய உரை வருமாறு:
புதுமைக்கான முனைப்பிருந்தால், அதனை விரைவாக ஏற்றுக்கொள்ளும் ஆர்வம் நாட்டில் உள்ளது. இதனால்தான் டிஜிட்டல் இந்தியா, இந்தியாவின் தீர்மானமாக, சுயசார்பு இந்தியாவின் நடைமுறையாக இருக்கிறது. டிஜிட்டல் இந்தியா என்பது இந்தியாவினுடைய பலத்தின் 21ஆம் நூற்றாண்டிற்கான முழக்கம்.
ஓட்டுநர் உரிமம் பெறுவதாக இருந்தாலும், பிறப்புச் சான்றிதழ் பெறுவதாக இருந்தாலும் சரி, மின்சாரக் கட்டணம், தண்ணீர் வரி அல்லது வருமான வரி செலுத்துதல் போன்றவையாக இருந்தாலும் சரி, இவற்றையெல்லாம் தற்போது டிஜிட்டல் இந்தியா தளத்தின் மூலம் எளிதாகக் செய்யலாம். கிராமங்களில் கூட இவை பொது சேவை மையங்கள் மூலமாக செய்யப்படுகின்றன. இந்த தசாப்தம் டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் இந்தியாவின் திறன்களையும், உலகளாவிய டிஜிட்டல் பொருளாதாரத்தில் அதன் பங்கையும் மேம்படுத்தப்போகிறது.
இவ்வாறு பிரதமர் மோடி உரையாற்றினார்.