சி.பி.ஐ அமைப்பு மாநிலங்களில் சோதனை நடத்தவும், விசாரணை நடத்தவும் ஒவ்வொரு மாநில அரசும் பொது ஒப்புதல் அளித்து உத்தரவு பிறப்பிப்பது வழக்கம். முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையில் நடந்த ஆந்திர மாநில அரசும் அத்தகைய உத்தரவுகளை பிறப்பித்து வந்தது. ஆனால், மத்தியில் பாஜக கட்சியுடன் கூட்டணியை முறித்து, மத்திய அரசை கடுமையாக விமர்சித்து வந்தார் சந்திரபாபு நாயுடு. இதனால் மத்திய அரசுடன் ஆந்திர மாநில அரசு மோதல் உச்சக்கட்டத்திற்கு சென்றது. அதன் காரணமாக ஆந்திராவில் விசாரணை நடத்த சி.பி.ஐ.க்கு அனுமதி மறுத்து அரசாணை பிறப்பித்தது மாநில அரசு. கடந்த ஆண்டு நவம்பர் 8-ஆம் தேதி இந்த அரசாணை பிறப்பிக்கப்பட்டது. மாநிலத்தில் உள்ள மத்திய அரசு ஊழியர்களுக்கு எதிராக ஊழல் வழக்கு விசாரணை நடத்த ஆந்திர மாநில அரசுக்கே அதிகாரம் அளிக்கப்பட்டது.
தெலுங்கு தேசம் கட்சியுடன் தொடர்புடையவர்கள் வீடுகளில் சி.பி.ஐ. மற்றும் வருமான வரி சோதனைகள் நடத்தப்பட்டதால், இந்த நடவடிக்கையை சந்திரபாபு நாயுடு அரசு மேற்கொண்டது. இதை அப்போது எதிர்க்கட்சி தலைவராக இருந்த ஜெகன் மோகன் ரெட்டி எதிர்த்தார். இந்நிலையில், சமீபத்தில் நடந்த ஆந்திர சட்டசபை தேர்தலில், தெலுங்கு தேசம் கட்சியை வீழ்த்தி, ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சி, ஆட்சியை பிடித்துள்ளது. ஆந்திர மாநிலத்தின் முதல்வராக ஜெகன் மோகன் ரெட்டி பதவியேற்றார். சந்திரபாபு நாயுடு தலைமையிலான முந்தைய அரசு கொண்டு வந்த திட்டங்களை ரத்து, பல அதிரடி நடவடிக்கைளை எடுத்து வருகிறார்.
இதன் தொடர்ச்சியாக, சி.பி.ஐ.க்கு அனுமதி மறுத்து பிறப்பிக்கப்பட்ட அரசாணை ரத்து செய்யப்பட்டுள்ளது. சி.பி.ஐ.க்கு வழக்கமான எல்லா அதிகாரங்களும் அளிக்கும் புதிய அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி உத்தரவின்பேரில், சிறப்பு தலைமை செயலாளர் இந்த அரசாணையை பிறப்பித்தார். ஆந்திர மாநில அரசு சி.பி.ஐக்கு மீண்டும் அனுமதி அளித்துள்ள நிலையில், மேற்கு வங்க மாநிலத்தின் முதல்வர் மம்தா பானர்ஜி சி.பி.ஐக்கு விதித்த தடையை தளர்த்துவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.