50 லட்சம் மோசடி: போலி சாமியார் கைது
தெலுங்கானா மாநில தலைநகரான ஐதராபாத் நகரில் பவிஷ்யவாணி என்ற பெயரில் ஜோதிடம், மாந்தரிக நிலையம் நடத்தி வந்தவர், நரசிம்ம சார்யுலு. விஜயவாடா, நெல்லூர், விசாகப்பட்டினம், குண்டூர் போன்ற நகரங்களிலும் கிளை அலுவலகங்களை நடத்தி வந்தார். ராசிகளை அடிப்படையாக வைத்து தோஷ நிவர்த்திக்கு தீர்வு சொல்லும் இவரது நிகழ்ச்சிகள் பிரபல தனியார் தெலுங்கு தொலைக்காட்சி சேனல்களில் அவ்வப்போது ஒளிபரப்பாகி வந்துள்ளது.
திருமண தோஷங்களை நிவர்த்தி செய்வதாகவும், வேலைவாய்ப்பு, பிள்ளைப்பேறு, குடும்பச் சண்டை உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதாக கூறி ஏராளமானவர்களிடம் 50 லட்சம் ரூபாய் வரை மோசடி செய்ததாக போலீசில் புகார்கள் குவிந்தன. மேலும், கணவனுடன் பிரச்சனை என்று கூறி தீர்வுதேடி வந்த பெண்களில் பலரை இவர் ஆசைநாயகியாக்கி கொண்டதாகவும் கூற்றச்சாட்டு எழுந்தது. பணம் தந்து ஏமார்ந்தவர்கள் போலீசில் புகார் அளிக்காமல் இருக்க சி.பி.ஐ. அதிகாரி போன்ற போலி அடையாள அட்டையை காட்டியும் மிரட்டி வந்துள்ளார். இவற்றின் அடிப்படையில், நரசிம்ம சார்யுலுக்கு எதிராக 5 வழக்குகளை பதிவு செய்த ஐதராபாத் நகர போலீசார் மீர்பேட் பகுதியில் உள்ள பவிஷ்யவாணி அலுவலகத்தில் அவரை நேற்று கைது செய்தனர்.