நாகப்பட்டினம் மாவட்டம், வேளாங்கண்ணி அருகே அமைந்துள்ளது நாகூர். இந்தப் பகுதியில் தென்னிந்தியாவின் மிகப்பெரிய தர்காவும் உள்ளது. இந்த நாகூர் தர்காவில் மனிதர்கள் எந்த வேற்றுமையுமின்றி வழிபட்டுவருகின்றனர். இந்தியாவிலேயே இரண்டாம் பெரிய தர்கா என்றும் நாகூர் தர்கா கூறப்படுகிறது. இங்கு சையத் ஷாஹுல் ஹமீத் அல்லது நாகூர் ஆண்டவர் என்று அழைக்கக்கூடிய சூபி ஞானியின் சமாதி உள்ளது.
சூபி ஞானியான நாகூர் ஆண்டவர் ஷாகுல் ஹமீத், பல அற்புதங்களைச் செய்ததாக நம்பப்படுகிறது. 16 ஆம் நூற்றாண்டின் தஞ்சாவூரின் இந்து ஆட்சியாளரான மன்னர் அச்சுதப்ப நாயக்கர் உடல் ரீதியான துன்பங்களைச் சந்தித்து வந்ததாகவும், அதனை நாகூர் ஆண்டவர் குணப்படுத்தினார் என்றும் சொல்லப்படுகிறது. தற்போது இருக்கும் நாகூர் தர்கா ஷாகுல் ஹமீதின் தீவிர பக்தர்களால் கட்டப்பட்டதாகவும், இந்துக்களின் பெரும் பங்களிப்புடன் கட்டப்பட்டதாகவும் நம்பப்படுகிறது.
இந்த தர்கா பிரபலமான பெரிய புனித யாத்திரை மையமாகு விளங்குகிறது. இந்தத் தர்காவில் இஸ்லாம் மதம் சார்ந்த மக்கள் மட்டுமின்றி இந்து மதத்தை சார்ந்தோர்களும் வழிபாடு நடத்துவர். இந்த தர்கா இரு மதங்களுக்கிடையில் அமைதியான சகவாழ்வைக் குறிக்கிறது.
நாகூர் தர்காவில் கொண்டாடப்படும் மிக முக்கியமான நிகழ்வு கந்தூரி விழாவாகும், இது ஷாகுல் ஹமீதின் நினைவு தினத்தை பதினான்கு நாட்கள் நினைவுகூருகிறது. தர்காவின் நிர்வாகம் மற்றும் பராமரிப்பு ஆகியவை சென்னை உயர் நீதிமன்றத்தால் ஆணையிடப்பட்ட திட்டத்தின் கீழ் செயல்பட்டு வருகிறது. அந்த திட்ட தீர்ப்பின்படி நாகூர் ஆண்டகையின் வாரிசுதாரர்கள் நிர்வாகித்து வருகின்றனர். தற்போது டாக்டர் செய்யது காமில் சாஹிப் காதிரி தலைமை நிர்வாகியாக இருக்கிறார். தற்போது, இந்த தர்காவின் வழக்கறிஞராக உச்சநீதீமன்ற வழக்கறிஞர் ராம் சங்கர் நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.