Skip to main content

கதாநாயகி முதல் வில்லி வரை... நடிகை ஸ்ரீதேவியின் திரைப்பட வாழ்க்கை வரலாறு

Published on 26/02/2018 | Edited on 27/02/2018

நடிகை ஸ்ரீதேவியின் பிறந்த ஊர் நெல்லை மாவட்டம், திருவேங்கடம் தாலுக்காவில் உள்ள மீனம்பட்டி கிராமம். நெல்லை - விருதுநகர் மாவட்ட எல்லையில் உள்ளது இந்த கிராமம். இவரது தந்தை ஐயப்ப நாயக்கர். வழக்கறிஞரான இவருக்கு இரண்டு மனைவிகள். முதல் மனைவி மீனம்பட்டியிலேயே தீப்பட்டி தொழிற்ச்சாலை வைத்து நடத்தி வருகிறார். இரண்டாவது மனைவி ராஜேஸ்வரி. 1963-ம் ஆண்டு, ஆகஸ்டு 13-ந்தேதி ராஜேஸ்வரிக்கு பிறந்தவர்தான் ஸ்ரீதேவி. இரண்டாவது மனைவி, குழந்தையுடன் ஐயப்ப நாயக்கர் சென்னையில் குடியேறினார். 

 

Young sridevi


1969-ம் ஆண்டு தமிழில் துணைவன் என்ற தமிழ் படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். அதில் தமிழ் கடவுள் முருகன் வேடம் ஏற்று நடித்துள்ளார். அதனைத் தொடர்ந்து அவருக்கு படவாய்ப்புகள் வந்த வண்ணம் இருந்தன. 

பூம்பட்ட என்ற மலையாள படத்திலும், கந்தன் கருணை, நம் நாடு, பிரார்த்தனை, பாபு, பாடி பந்துலு, பால பாரதம், வசந்த மாளிகை மற்றும் பக்த கும்பரா ஆகிய தமிழ் மற்றும் தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் குழந்தை நட்சத்திரமாக நடித்து பெயர் பெற்றார்.

 

Sridevi with kamalhassan

அதன்பின் 1976-ம் ஆண்டு பாலச்சந்தரின் மூன்று முடிச்சு படம் மூலம் தனது 13வது வயதில் கதாநாயகியாக அறிமுகமானார். இதில் ரஜினிகாந்த் மற்றும் ஸ்ரீதேவியுடன் நடிகர் கமல்ஹாசன் சிறப்பு தோற்றத்திலும் வந்து செல்வார்.

தொடர்ந்து 16 வயதினிலே, சிகப்பு ரோஜாக்கள், வறுமையின் நிறம் சிவப்பு, பிரியா, ஜானி உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பெற்றார்.

தெலுங்கு மொழியில் அவர் நடித்த, கொண்ட வீட்டி சிம்ஹம், ஷண ஷணம், பொப்பிலி புலி உள்ளிட்டவை சிறந்த படங்களாக உள்ளன.  முடுல கொடுக்கு, பிரேமாபிஷேகம், பங்காரு கனகா, கைதி ருத்ரய்யா உள்ளிட்ட தெலுங்கு படங்களிலும் அவர் நடித்துள்ளார்.

தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் 300க்கும் மேற்பட்ட படங்களில் அவர் நடித்துள்ளார்.

தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் அடுத்தடுத்து ஹிட் படங்கள் கொடுத்து வந்த நடிகை ஸ்ரீதேவி இந்தி திரையுலகிலும் நுழைந்து புகழ் பெற்றார்.  சொல்வா சாவன் என்ற இந்தி படத்தில் முதன்முதலில் அறிமுகம் ஆன அவர் அடுத்து ஹிம்மத்வாலா என்ற படத்தில் ஜிதேந்திரா உடன் ஜோடியாக நடித்துள்ளார்.

 

puli sridevi

அவருடன் மாவாலி, மக்சாத் மற்றும் ஜஸ்டிஸ் சவுத்ரி உள்ளிட்ட படங்களிலும் ஜோடியாக நடித்து நடிகை ஸ்ரீதேவி இந்தி திரைப்பட ரசிகர்களிடையே புகழ் பெற்றார்.

நாகினா, மிஸ்டர் இந்தியா, சால்பாஸ், சாந்தினி, லம்ஹே, குடா கவா உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார்.  லேடி சூப்பர் ஸ்டார் என அழைக்கப்பட்ட அவர் திரைப்பட தயாரிப்பாளர் போனி கபூரை திருமணம் செய்து கொண்டார்.  இந்த தம்பதிக்கு ஜான்வி, குஷி ஆகிய இரு மகள்கள் உள்ளனர்.

நீண்ட வருடங்களுக்கு பின் 2004ம் ஆண்டில் மாலினி ஐயர் தொலைக்காட்சி தொடரில் தோன்றி ரசிகர்களை கவர்ந்துள்ளார்.  தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நடுவராகவும் அவர் இருந்துள்ளார்.

அதன்பின்னர் திரைப்படங்களில் மீண்டும் நடிக்க வந்த அவர், 2011ம் ஆண்டில் இங்கிலீஷ் விங்லீஷ் என்ற படத்தில் தோன்றினார்.  அவரை இந்தி திரையுலகினர் வரவேற்றனர்.

அவர் கடைசியாக நடித்த தமிழ் படம் புலி.  2015ம் ஆண்டில் அக்டோபரில் இது வெளிவந்தது.  இதில் வில்லியாக நடித்து உள்ளார்.  இந்தியில் அவரது நடிப்பில் வெளியான கடைசி படம் மாம்.

சார்ந்த செய்திகள்