அனைத்துக் கட்சிக் கூட்டத்தை உடனடியாகக் கூட்ட வேண்டும்: வேல்முருகன் வலியுறுத்தல்
சட்டமீறல் நடந்துள்ள காவிரி மீளாய்வு வழக்குத் தீர்ப்பு சரிசெய்யப்பட வேண்டும்! முதல் நடவடிக்கையாக, அனைத்துக் கட்சிக் கூட்டத்தை உடனடியாகக் கூட்ட வேண்டும்! சட்ட நிபுணர்கள் தட்டிக்கழித்துவிடாமல் கட்டாயம் சீராய்வு மனு தாக்கல் செய்ய வேண்டும் என தமிழக அரசை தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
வெந்த புண்ணில் வேல் என்பதாக ஆனது காவிரி மீளாய்வு வழக்குத் தீர்ப்பு தமிழ்நாட்டிற்கு!
நொந்துபோன உள்ளங்கள் தம் வேதனையை வார்த்தைகளாய்க் கொட்டின.
ஆனால் வாய்த்துடுக்கான அதிமுக அமைச்சர்கூட “தீர்ப்பைப் படிக்காமல் எப்படி கருத்தைச் சொல்ல முடியும்” என்று எதிர்க்கேள்விதான் கேட்டார்.
துணை முதல்வரும் தீர்ப்பைப் பற்றிப் பேசவில்லை; “மோடி கூறியே கூடினோம் ஒன்றோம்” என்று சொந்தப் பாட்டையே பாடினார்.
முதல்வரோ “கழுவுற மீனில் நழுவுற மீனாய்” இருக்கிறார்.
தீர்ப்பில், 14.75 டிஎம்சி குறைத்தது பாதகம் என்றால், காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் ஒழுங்காற்றுக் குழு அமைப்பது சாதகம் என்கிறார்.
நதிகள் எந்த மாநிலத்துக்கும் சொந்தமல்ல; அவை தேசியச் சொத்து என்று சொல்லியிருப்பது வரவேற்கத்தக்கது என்கிறார்.
“15 ஆண்டுகளுக்கு இந்தத் தீர்ப்பு செல்லும் என்று சொல்லிருப்பதால் மேல்முறையீடு செய்ய முடியாது; சட்ட நிபுணர்கள் தீர்ப்பை ஆய்வு செய்து அதன்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும்” என்கிறார்.
முதல்வரை கேள்வி கேட்கும் உரிமை மக்களாகிய நமக்கு நிச்சயம் உண்டு, அதன்படி முதன்மையான சில விடயங்களை அவர் முன் வைக்கிறோம்.
காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் ஒழுங்காற்றுக் குழுவை மோடி அமைக்காததற்குக் காரணம் இப்படி 14.75 டிஎம்சியைக் குறைப்பதற்காகத்தான் என்பது இப்போதாவது முதல்வருக்குப் புரிகிறதா, இல்லையா?
காவிரி தேசியச் சொத்து என்பதை எப்படி வரவேற்பார் முதல்வர்?
தேசியம் என்பதை இந்திய தேசியம் என்று புரிந்துகொண்டிருப்பதன் கோளாறு அது.
ஆனால் அப்படி ஒரு தேசியம் அரசமைப்புச் சட்டத்திலேயே கிடையாது என்பதும்; தமிழ்நாடு, ஆந்திரம், கர்நாடகம், கேரளம், மகாரஷ்டிரம், மேற்கு வங்கம், பாஞ்சாலம் உள்ளிட்ட பல்வேறு தேசங்கள் சேர்ந்த ஒன்றியம்தான் இந்தியா என்பதும் முதல்வருக்குப் புரிந்துதான் ஆகவேண்டும்.
அப்போதுதான் காவிரி என்பது தமிழ்நாடு, கர்நாடகம், கேரளம், புதுச்சேரி ஆகிய 4 மாநிலங்களுக்கு மட்டுமே உரித்தான சொத்து என்பதும் அவருக்குப் புரியவரும்.
15 ஆண்டுகளுக்கு எதுவும் பேசக் கூடாது என்கிறதே தீர்ப்பு; இப்படிச் சொல்வதற்கு சட்டத்தில் எங்கே இடமிருக்கிறது?
சட்டத்துக்குப் புறம்பான, தனிமனித விருப்பமான இதனைத் திணிப்பது பாசிசமல்லவா?
காலக்கெடு என்பதை காவிரி தொடர்புடைய நான்கு மாநிலங்களும் தாங்களாக முடிவு செய்துகொள்ளலாமே தவிர நீதிமன்றமோ நீதிபதிகளோ தன்னிச்சையான முடிவு செய்வதல்ல.
இப்படிப் பல சட்டமீறல்கள் நடந்துள்ளன. அப்படிப்பட்ட ஒரு தீர்ப்பை எப்படி ஏற்பது?
ஆகவேதான் சொல்கிறோம், காவிரி மீளாய்வு வழக்குத் தீர்ப்பு சரிசெய்யப்பட வேண்டும்!
அதற்கான முதல் நடவடிக்கையாக, அனைத்துக் கட்சிக் கூட்டத்தை உடனடியாகக் கூட்ட வேண்டும்; அதில் என்ன செய்வது என்பதை முடிவு செய்ய வேண்டும்.
சட்ட நிபுணர்கள் தட்டிக்கழித்துவிடக் கூடாது; ஏற்கனவே வழக்கில் கோட்டைவிட்டவர்களும் அவர்கள்தான்.
எனவே கட்டாயம் சீராய்வு மனு தாக்கல் செய்ய வேண்டும்! இவ்வாறு கூறியுள்ளார்.