
புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகில் உள்ளது பட்டத்திக்காடு கிராமம். இந்த கிராமத்தில் மூதாட்டி உள்படச் சிலர் மது விற்பனை செய்வதாக ஆலங்குடி மதுவிலக்கு போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து நேற்று (02.04.2025) மதுவிலக்கு போலீசார் பட்டத்திக்காடு கிராமத்திற்கு மாற்று உடையில் சென்று சோதனை செய்துள்ளனர். அப்போது சம்பந்தப்பட்ட மூதாட்டி வீட்டில் 4 மதுப்பாட்டில்களை போலீசார் கைப்பற்றியுள்ளனர். அப்போது அங்கு வந்த அதே ஊரைச் சேர்ந்த சிங்காரம் மகன் மகேந்திரன் (வயது 40) உள்ளிட்ட சிலர் மாற்று உடையில் இருந்த போலீசாரிடம், “நீங்கள் யார்?. போலீஸ் என்றால் சீருடை இல்லையே எப்படி நம்புவது உங்கள் அடையாள அட்டையை காட்டுங்கள்” என்று வாக்குவாதம் செய்துள்ளனர்.
இந்த வாக்குவாதம் முற்றிய நிலையில் அந்தோணிசாமி என்ற மதுவிலக்கு போலீசார் தனது அடையாள அட்டையைக் காட்டியுள்ளார். அதன் பிறகு போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட மகேந்திரனை கறம்பக்குடி காவல் அழைத்துவரச் சொல்லிவிட்டுச் சென்றுள்ளனர் மதுவிலக்கு போலீசார். தனது நண்பரான மூர்த்தியுடன் கறம்பக்குடி காவல் நிலையம் சென்ற மகேந்திரன் மாலை வீட்டிற்கு வந்த போது வீட்டில் உள்ளவர்கள், “உனக்கு ஏன் தேவையில்லாத பிரச்சனை?” என்று கூறியுள்ளனர். அதன் பிறகுத் தனது சகோதரிகளுக்கு போன் செய்த மகேந்திரன், “தன்னை காவல் நிலையம் அழைத்துச் சென்றது அவமானமாக உள்ளது. அதனால் விஷம் குடித்துவிட்டு தோட்டத்தில் இருக்கிறேன்” எனக் கூறியுள்ளார்.
உடனே மகேந்திரன் சொன்ன இடத்திற்குச் சென்ற அவரது உறவினர்கள் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த மகேந்திரனை மீட்டு கறம்பக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பணியில் இருந்த செவிலியர் முதலுதவி சிகிச்சை அளித்தார். அதன் பிறகு மேல் சிகிச்சைக்காகப் புதுக்கோட்டை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பத் தயாரான நிலையில் மகேந்திரன் உயிரிழந்தார். இதனையடுத்து அவரது உடல் புதுக்கோட்டை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த நிலையில் மகேந்திரனின் தந்தை சிங்காரம் கறம்பக்குடி காவல் நிலையத்தில் கொடுத்த புகாரில், “எனது மகனை கறம்பக்குடி காவல் நிலையம் அழைத்து வந்த மதுவிலக்கு காவலர் அந்தோணிசாமி உள்ளிட்ட போலீசார் துன்புறுத்தியது தான் என் மகன் இறப்பிற்குக் காரணம். என் மகன் இறப்பிற்குக் காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.
அந்த புகார் மனுவைப் பெற்று முதல் தகவல் அறிக்கையில் 194 (1) என்ற பிரிவின் கீழ் போலிசார் வழக்குப் பதிவு செய்தனர். இதனையடுத்து மகேந்திரன் உடலைப் பிரேதப் பரிசோதனை செய்து உறவினர்களிடம் ஒப்படைத்தனர். அதன் பின்னர் இன்று (03.04.2025) இரவு மகேந்திரன் உடல் தகனம் செய்யப்பட்டது. மகேந்திரனை போலிசார் காவல் நிலையத்தில் துன்புறுத்தியதால் தான் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டதாகத் தகவல்கள் பரவியுள்ள நிலையில் கறம்பக்குடி போலிசாரோ, “போலிசாருடன் வாக்குவாதம் செய்த மகேந்திரனை போலிசார் காவல் நிலையம் அழைத்துவரவில்லை. அவரது நண்பர் தான் அழைத்து வந்தார். காவல் நிலையத்தில் அவருக்கு போலிசார் எந்த துன்புறுத்தலும் செய்யவில்லை. ஆனால், அவர் விஷம் குடித்து இறந்த நிலையில் அவரது தந்தை கொடுத்த புகாரில் கூறியுள்ளபடி போலீசார் பெயருடன் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. உண்மை நிலை என்ன என்பது பிரேதப்பரிசோதனை அறிக்கையிலும் புலன் விசாரணையிலும் தெரியும்” என்கின்றனர். இதனால் கறம்பக்குடி பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.