
விழுப்புரத்தில் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர், நடிகர் கமல்ஹாசன் கட்சி தொடங்கியிருப்பதற்கு வாழ்த்துகள். இடதுசாரிகள் திராவிடத்தை ஏற்றுக்கொண்டனரா? கொச்சையான முறையில் திராவிடத்தை பரிமாறி இருப்பது நமக்கெல்லாம் அவமானம். தமிழர்கள் மற்றும் அவர்களின் தன்மானத்தை எல்லாம் இந்த நேரத்தில் அடுத்த மாநில முதல்வர்கள் சொல்லி தருகிறார்கள்.
கெஜ்ரிவாலுக்கும், தமிழ்நாட்டிற்கும் என்ன சம்பந்தம். தமிழ் பற்றியும், தமிழகம் பற்றியும் ஒன்றுமே தெரியாத கெஜ்ரிவாலை வைத்து கமல்ஹாசன் கட்சி தொடங்கியிருப்பது தமிழகத்திற்கு அவமானம். கமல்ஹாசனை பற்றி ஒருவர் காகிதப்பூ மணக்காது என்று சொல்லியிருக்கிறார். அதற்கு அவர், தன்னை விதை என்று கூறியுள்ளார். அப்படியென்றால் கமல்ஹாசனை காகித விதை என்று சொல்லலாமா? என்னை பொறுத்தவரை கடந்த 50 ஆண்டுகளாக தமிழகத்தின் வளர்ச்சி என்று பார்த்தால் ஏமாற்றம்தான் என்றார்.

மேலும் பேசிய அவர், வருகிற 24, 25–ந்தேதிகளில் பிரதமர் நரேந்திரமோடி தமிழகத்திற்கு வருகை தருகிறார். குறிப்பாக 50 ஆண்டுகள் நிறைவடைந்த விழுப்புரம் மாவட்டம் ஆரோவில் சர்வதேச நகரத்தின் பொன்விழா கொண்டாட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளார். புதுச்சேரியை ஒட்டியுள்ள பகுதியில் ஆரோவில் இருந்தாலும் தமிழகத்தில் அடங்கியிருப்பது நமக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. அதிலும் குறிப்பாக விழுப்புரம் மாவட்டத்தில் இருப்பது மகிழ்ச்சி தரக்கூடியது. பிரதமர் வருகைக்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகிறது.
தமிழகத்தை பொறுத்தவரை பிரதமரின் செல்வாக்கு அபரிமிதமாக இருக்கிறது. பா.ஜ.க.வின் செல்வாக்கும் வளர்ந்து கொண்டிருக்கிறது. எந்த பிரதமரும் காட்டாத பாசத்தை, அன்பை நரேந்திரமோடி, தமிழ்மொழி மீதும், தமிழர்களின் மீதும் காட்டி கொண்டிருக்கிறார். எந்தவொரு இடத்திலும் தமிழின் பெருமையை நிலைநாட்டுவதற்கு அவர் தயங்கியதே கிடையாது. இவ்வாறு கூறினார்.