
மின் ஊழியர்களுக்கு ஏற்கனவே ஒப்புக்கொண்டபடி 2.57 மடங்கு ஊதிய உயர்வு வழங்க தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது.
தமிழக அரசு ஊழியர்களுக்கு இணையாக மின்வாரிய ஊழியர்களுக்கும் 2.57 மடங்கு ஊதிய உயர்வு வழங்க கோரி, கோரிக்கை வைக்கப்பட்ட நிலையில் மின்வாரிய நிர்வாகமும் ஊழியர்கள் கேட்கும் உயர்வை தர ஒத்து கொண்டது.
தொழிற்சங்கம் முன்வைத்த 2.57 மடங்கு ஊதிய உயர்வு அளிக்க நிதித்துறையிடம் மின்வாரியம் ஒப்புதல் கோரியது. ஆனால் நிதித்துறை தரப்பில் அதிகாரிகளுக்கு 2.40 மடங்கும், தொழிலாளர்களுக்கு 2.57 மடங்கும் வழங்கலாம் என்றனர். இதற்கு தொழிலாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதை கண்டித்து தொழிற்சங்கத்தினர் பல கட்ட போராட்டம் நடத்தி வருகின்றனர். சமீபத்தில் சிஐடியு மற்றும் பிஎம்எஸ் ஆகிய சங்கங்கள் சார்பில் ஒருநாள் அடையாள வேலைநிறுத்தம் நடைபெற்றது.
இந்த நிலையில், தொழிற்சங்கங்கள் எதிர்பார்க்கும் 2.57 மடங்கு ஊதிய உயர்வு அளிக்க தமிழக அரசு ஒப்பு கொண்டுள்ளதாகவும், ஒப்பந்தம் 22ம் தேதி கையெழுத்தாக உள்ளதாகவும் தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.