Skip to main content

வக்ஃப் வாரியத் திருத்த மசோதா மக்களவையில் தாக்கல்; எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு

Published on 02/04/2025 | Edited on 02/04/2025

 

Opposition parties strongly oppose for Waqf Board Amendment Bill introduced in Lok Sabha

இந்தியாவில் இஸ்லாமிய சமூகத்தின் சொத்துக்களை நிர்வகிப்பதற்கு ‘வக்ஃப் வாரிய’ என்ற சட்டப்பூர்வ அமைப்பு உள்ளது. இந்த சொத்துக்களை கண்காணிப்பதற்கு கடந்த 1954ஆம் ஆண்டில் வக்ஃப் சட்டம் கொண்டுவரப்பட்டு, அதன் பின்னர் திருத்தப்பட்ட வக்ஃப் சட்டத்தின்படி, 1995ஆம் ஆண்டில் அனைத்து மாநிலங்களிலும் வக்ஃப் வாரியங்கள் அமைக்கப்பட்டது. இந்த அமைப்பின் கீழ், பள்ளிவாசல்கள், மதராஸக்கள், அறக்கட்டளை போன்றவற்றை பராமரிப்பது மட்டுமல்லாமல், இந்த வாரியத்தில் இருந்து வரும் வருமானத்தை சேகரித்து மத, கல்வி மற்றும் சமூக நலத்திட்டங்களுக்கும் பயன்படுத்தப்படும். இந்திய பாதுகாப்பு அமைச்சகம் மற்றும் ரயில்வே துறைக்கு அடுத்தப்படியாக வக்ஃப் வாரியத்தின் கீழ் தான் அதிக சொத்துக்கள் இருப்பதாகக் கூறப்படுகிறது. 

இந்த சூழ்நிலையில், வக்ஃப் வாரிய திருத்தச் சட்ட மசோதாவை கடந்தாண்டு மத்திய பா.ஜ.க அரசு கொண்டு வந்தது. அந்த மசோதாவில், இஸ்லாமிய பெண்கள், இஸ்லாமியர் அல்லாதோர் வக்ஃப் வாரியத்தில் இடம்பெற செய்வது, வக்ஃப் நிலத்தை அளவீடு செய்யும் அதிகாரத்தை மாவட்ட ஆட்சியர் அல்லது துணை ஆணையரிடம் மாற்றுவதும் உள்ளிட்ட பல்வேறு திருத்தங்கள் இடம்பெற்றது. இந்த மசோதாவிற்கு, காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இந்த சட்டத் திருத்த மசோதாவில் கடும் சர்ச்சைகள் இருக்கும் காரணத்தால், நாடாளுமன்றக் கூட்டுக் குழு ஒன்றை அமைத்து மசோதா குறித்து விவாதிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் கோரிக்கை வைத்தனர். அந்த கோரிக்கையை ஏற்று, மத்திய அரசு நாடாளுமன்ற கூட்டுக் குழுவை அமைத்தது. 

இந்த கூட்டத்தில் இடம்பெற்ற திமுகவின் எம்.பி ஆ.ராசா, அப்துல்லா மற்ற்ய்ம் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த கல்யாண் பானர்ஜி உள்ளிட்டோர் எதிர்க்கட்சிகள் வக்ஃப் வாரிய திருத்த மசோதாவுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். கடும் எதிர்ப்பையும் மீறி, ஆளுங்கட்சி முன்வைத்த திருத்தங்களை மட்டும் ஏற்றுக் கொண்டு 655 பக்கங்கள் கொண்ட வக்ஃப் சட்டத்திருத்த மசோதா அறிக்கைக்கு நாடாளுமன்ற கூட்டுக்குழு ஒப்புதல் அளிக்கப்பட்டிருந்தது. 

இந்த நிலையில், வக்ஃப் வாரிய சட்டத்திருத்த மசோதாவை, இன்று (02-04-25) நாடாளுமன்ற மக்களவையில் மத்திய அமைச்சர் கிரண் ரிஜுஜூ தாக்கல் செய்தார். இந்த மசோதாவிற்கு, எதிர்க்கட்சியான இந்தியா கூட்டணிகள் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து நாடாளுமன்றத்தில் அமளியில் ஈடுபட்டனர். இருந்த போதிலும், வக்ஃப் வாரிய திருத்த மசோதாவை தாக்கல் செய்த பின், நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜுஜூ பேசியதாவது, “நாடாளுமன்ற கட்டிடம் உள்பட பல சொத்துக்களை உள்ளடக்கிய ஒரு வழக்கு, கடந்த 1970இல் இருந்து டெல்லியில் நடந்து வருகிறது. இந்த வழக்கு நீதிமன்றத்தில் இருந்தது. ஆனால், அதன் பின்னர் ஐக்கிய முற்போக்கு கூட்டணி நீக்கப்பட்ட 123 சொத்துக்களை வக்ஃப் வாரியத்திடம் வழங்கியது. நாம் இந்த திருத்தத்தை அறிமுகப்படுத்தாவிட்டால், நாம் அமர்ந்திருக்கும் கட்டிடம் கூட வக்ஃப் வாரிய சொத்தாகக் கூறப்பட்டிருக்கும்” என்று பேசினார். 

சார்ந்த செய்திகள்