
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24வது அகில இந்திய மாநாடு மதுரையில் நடைபெற்று வருகிறது. நேற்று (02.04.2025) தொடங்கிய இந்த மாநாடு ஏப்ரல் 06ஆம் தேதி (06.04.2025) வரை நடைபெற உள்ளது. அந்த வகையில் இன்று (03.04.2025) ‘கூட்டாட்சிக் கோட்பாடே இந்தியாவின் வலிமை’ என்ற தலைப்பில் சிறப்புக் கருத்தரங்கம் இன்று நடைபெற்றது. இதில் அக்கட்சியின் மத்தியக் குழுவின் ஒருங்கிணைப்பாளர் பிரகாஷ் காரத், செயற்குழு உறுப்பினர் கே. பாலகிருஷ்ணன், மாநிலச் செயலாளர் பெ. சண்முகம், கேரள முதல்வர் பினராயி விஜயன், தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், கர்நாடக மாநில உயர் கல்வித்துறை அமைச்சர் எம்.சி. சுதாகர், சு. வெங்கடேசன் எம்.பி. எனப் பலரும் கலந்து கொண்டனர்.
இந்த மாநாட்டில் முதல்வர் மு.க. ஸ்டாலின் பேசுகையில், “திராவிட இயக்கத்துக்கும், பொதுவுடைமை இயக்கத்துக்குமான உறவு என்பது, ‘கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையைத் தந்தை பெரியார் தமிழ் மொழியில் மொழிபெயர்த்து வெளியிட்டதில் இருந்தே தொடங்குகிறது. தன்னை ஒரு கம்யூனிஸ்டாகவே அடையாளப்படுத்திக்கொண்டவர் கலைஞர். உலக மாமேதை கார்ல் மார்க்ஸ் அவர்களின் உருவச் சிலை சென்னையில் அமைக்கப்படும் என்று சட்டமன்றத்தில் அறிவித்துவிட்டு உங்களுள் பாதியாக இந்த மாநாட்டுக்கு வந்திருக்கும் என் பெயர், ஸ்டாலின். இந்தக் கொள்கை உறவோடு "எல்லோர்க்கும் எல்லாம்" என்ற சமத்துவச் சமுதாயத்தை அமைக்க வேண்டும் என்ற இலட்சியத்துக்காகத்தான் நாம் தேர்தல் கூட்டணி அமைக்கிறோம்.
மாற்றத்தை நோக்கிய நம்முடைய பாதையும் பயணமும் மிக நீண்டது. உடனே நிகழ, மாற்றம் என்பது ‘ மேஜிக் (Magic)’ அல்ல; அது ஒரு செயல்முறை (Process). இந்தப் பயணத்தில், 2019ஆம் ஆண்டு முதல் நாம் இணை பிரியாமல் இருக்கிறோம். ஏன் என்றால், நம்முடைய இலக்கு என்ன, நாம் யாரை எதிர்க்க வேண்டும் எதற்காக எதிர்க்க வேண்டும் என்ற தீர்க்கமான முடிவோடு இயங்கிக்கொண்டு இருக்கிறோம். தமிழ்நாட்டில் உள்ள இந்தக் கூட்டணியில் விரிசல் ஏற்படாதா? என்று நப்பாசையோடு சில வெளிநபர்கள் தொடர்ந்து செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். அவர்களின் எண்ணம் நிச்சயம் ஈடேறாது. இங்கு இருக்கும் யாரும், அதற்கு இடம் தரவும் மாட்டோம். இந்தக் கருத்தரங்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மைதானத்துக்கு, மழையின் காரணமாக இந்த அரங்கத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது தோழர் சீத்தாராம் யெச்சூரியின் பெயரைச் சூட்டியிருப்பதைப் பார்த்தபோது, என் நெஞ்சம் கனத்தது.
இந்தியாவின் தலைசிறந்த போராளிகளில் ஒருவர் நாமெல்லாம் பெருமதிப்பு வைத்திருந்த யெச்சூரி அவரின் இழப்பு, நமக்கு மட்டுமல்ல; இந்தியாவுக்கே மிகப்பெரிய இழப்பு. சீத்தாராம் யெச்சூரி பொதுவுடைமை கொள்கைகளுக்காகப் போராடியவர். எதேச்சாதிகாரத்தைக் கடுமையாக எதிர்த்தவர். சமத்துவச் சிந்தனையோடு சமூகநீதிச் சிந்தனையை இணைத்தவர். மதவாதக் கருத்துகளையும் மூடநம்பிக்கைகளையும் கடுமையாக எதிர்த்தவர். அவர் மறைந்தாலும், அவரது சிந்தனைகள் என்றைக்கும் நம்மை வழிநடத்தும் என்பதற்கு அடையாளமாகத்தான் இந்த மாநாட்டு எழுச்சியை பார்த்துக் கொண்டிருக்கிறோம். கூட்டாட்சிக் கோட்பாடே இந்தியாவின் வலிமை என்று இன்றைக்கு நாட்டுக்குத் தேவையான நாடு முழுவதும் பேசப்பட வேண்டிய கருத்தை இந்தக் கருத்தரங்குக்குத் தலைப்பாக வைத்திருக்கிறார்கள்.

கூட்டாட்சி என்ற சொல்லே இன்றைக்கு ஒன்றிய ஆட்சியாளர்களுக்கு ‘அலர்ஜி’ ஆகிவிட்டது. மாநில உரிமைகளுக்காகப் பேசுவது அவர்களுக்குப் பிடிக்கவில்லை. ஒன்றியத்தை ஆளும் பா.ஜ.க. அரசின் எதேச்சாதிகாரத் தன்மையால் அதிகமாக பாதிப்படைகின்றவர்களில் முதன்மையாக இருப்பது, நானும் நம்முடைய ‘சகாவு’ பினராயி விஜயனும் தான். அதனால், இந்தக் கருத்தரங்கில் நாங்கள் பேசுவதை நீங்கள் வாக்குமூலமாகவே எடுத்துக்கொள்ளலாம். அதைத்தான் முன்பே பேசிவிட்டுச் சென்றிருக்கிறார். அதைத் தொடர்ந்து நானும் பேச வந்திருக்கிறேன். ‘பிரதர்’ என்றார், உண்மைதான். எனக்கு அவர் மூத்த சகோதரர். நமது அரசியலமைப்புச் சட்டத்தின் முதல் வரியே, "பல்வேறு மாநிலங்களால் ஆன ஒன்றியம்தான் இந்தியா" என்று தெளிவாக குறிப்பிட்டிருக்கிறது.
அதனால்தான், ‘ஒன்றிய அரசு’ என்று சொல்கிறேன். சட்டத்தில் இல்லாததை நான் சொல்லவில்லை. ஆனால், அதையே அவர்களால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. அதிகாரம் பரவலாக்கப்பட வேண்டும் என்பதை அவர்கள் விரும்பவில்லை என்பதன் வெளிப்பாடுதான் அவர்களின் கோபம். திமுகவைப் பொறுத்தவரைக்கும், மாநில சுயாட்சி என்பது எங்களுடைய உயிர்க் கொள்கை! பேரறிஞர் அண்ணாவும், கலைஞரும் வலியுறுத்திய கொள்கை அது. பேரறிஞர் அண்ணாவின் உயில் என்று சொல்லப்படுகின்ற இறுதி கடிதத்திலேயே, கூட்டாட்சித் தத்துவத்தை மக்களுக்குக் கற்றுத்தர வேண்டும் என்று எழுதி வைத்திருக்கிறார்.

1970இல் ‘மாநிலத்தில் சுயாட்சி, மத்தியில் கூட்டாட்சி’ என்று கலைஞர், முப்பெரும் விழாவில் ஐம்பெரும் முழக்கங்களில் ஒன்றாக உருவாக்கிக் கொடுத்தார். அதுமட்டுமல்ல, ‘தமிழ்ச் சமுதாயத்தைக் காக்க, இந்தியாவிலுள்ள தேசிய இனங்களைக் காக்க, இந்தியாவிலுள்ள மாநிலங்களின் உரிமைகளைக் காக்க, இந்தியாவிலே இருக்கும் மாநிலங்கள் சுயமரியாதையோடு வாழ அந்தத் தீர்மானம் ஒரு முன்னோடி. அதுமட்டுமல்ல, உறவுக்குக் கை கொடுப்போம், உரிமைக்குக் குரல் கொடுப்போம்’ என்று 1974இல் சட்டமன்றத்தில் மாநில சுயாட்சித் தீர்மானத்தைக் கொண்டு வந்தார்.
மாநில சுயாட்சிக்காக இந்திய அளவில் கூட்டாட்சிக்காக நாம் தொடர்ந்து போராடி வருகிறோம். ஆனால், இதற்கு எதிரான பாசிச அரசாக, ஒன்றிய பா.ஜ.க. அரசு இருக்கிறது. ‘மாநில அரசுகள் டெல்லிக்கு காவடி தூக்கும் நிலைமையை மாற்றி, அதிகாரப் பகிர்வுக்கு வழிகாட்டுவதுதான் தன்னுடைய அணுகுமுறையாக இருக்கும்’ என்று சொல்லி பிரதமரான நரேந்திர மோடியின் ஆட்சிதான், மாநிலங்களை அழிக்கும் ஆட்சியாக, மாநில மொழிகளைச் சிதைக்கும் ஆட்சியாக, பல்வேறு தேசிய இன மக்களை ஒழிக்கும் ஆட்சியாகப் பல்வேறு பண்பாடுகள் கொண்ட மக்களின் நம்பிக்கைகளைச் சிதைக்கும் ஆட்சியாக இருக்கிறது.