
இந்தியாவின் அண்டை நாடான மியான்மரில் கடந்த 28ஆம் தேதி (28.03.2025) இந்திய நேரப்படி காலை 11:55 மணியளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 7.7 ஆகப் பதிவானது. இந்த நிலநடுக்கத்தால் நாட்டின் பல்வேறு நகரங்களில் உள்ள கட்டிடங்கள் இடிந்து விழுந்தன. அதே சமயம் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்து வீட்டைவிட்டு வெளியேறி வீதியில் தஞ்சமடைந்தனர். அதன் பின்னர் சிறிது நேரத்தில் மீண்டும் 6.4 ரிக்டர் அளவில் மற்றொரு நிலநடுக்கமும் ஏற்பட்டது.
இவ்வாறாக 28ஆம் தேதி மட்டும் 7 முறை மியான்மரில் நிலநடுக்கம் ஏற்பட்டது. ராணுவ ஆட்சி நடைபெற்று வரும் மியான்மரில் ஏற்பட்ட இந்த பேரிடர் மக்கள் மத்தியில் அதிர்ச்சியையும் அச்சத்தையும் ஏற்படுத்தியது. இத்தகைய சூழலில் தான் மியான்மரில் தொடர்ந்து மீட்புப்பணிகள் நடைபெற்று வருகிறது. இன்றைய (31.03.2025) நிலவரப்படி நிலநடுக்கத்தில் கட்டடங்கள் இடிந்து விழுந்த இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்தைக் கடந்துள்ளதாகத் தகவல் வெளியாகியிருந்தது. மேலும் காயமடைந்தோர் எண்ணிக்கை 3900 ஆக உயர்ந்துள்ளது என அந்நாட்டை ஆட்சி செய்து வரும் ராணுவக் குழு அறிவித்துள்ளது.
இந்நிலையில் மியான்மர் நிலநடுக்கத்தின் தீவிரத்தை விண்ணிலிருந்து கார்டோ சேட் - 3 என்ற செயற்கோள் மூலம் படம் பிடிக்கப்பட்ட படத்தை இஸ்ரோ வெளியிட்டுள்ளது. இந்த படத்தின் மூலம் நிலநடுக்கத்திற்கு முன்பும், பின்பும் நிலப்பரப்பில் ஏற்பட்டுள்ள மிகப் பெரிய அளவிலான மாற்றத்தை இந்த புகைப்படங்கள் மூலம் அறிய முடிகிறது. அந்த வகையில் மியான்மரின் மண்டலே, நைபித்தா உள்ளிட்ட நகரங்களில் உள்ள சாலைகள், பாலங்கள் மற்றும் குடியிருப்புகள் சிதைந்துள்ள காட்சிகள் வெளியாகியுள்ளன. மேலும் மியான்மரின் முக்கிய நிலத்தட்டு ஆண்டுக்கு 5 கி.மீ. வேகத்தில் நகர்ந்து இந்திய நிலத்தட்டோடு மோதியுள்ளதும் தெரியவந்துள்ளது.