Skip to main content

பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம்!

Published on 01/02/2024 | Edited on 01/02/2024
Union Cabinet meeting chaired by Prime Minister Modi

இந்த ஆண்டிற்கான நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் நேற்று (31-01-2024) தொடங்கியது. இந்த கூட்டத் தொடர் பிப்ரவரி 9 ஆம் தேதி வரை நடைபெறும் என கூறப்படுகிறது. இந்த ஆண்டின் முதல் கூட்டத் தொடரான பட்ஜெட் கூட்டத் தொடரின் முதல் நாளான நேற்று குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவின் உரையுடன் தொடங்கியது.

அந்த வகையில் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாம் நாளான இன்று (01-02-2024) மத்திய அரசின் 2024 - 2025 ஆம் ஆண்டிற்கான இடைக்கால பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்கிறார். கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து 5 முழுமையான பட்ஜெட்டை தாக்கல் செய்த நிர்மலா சீதாராமன், இந்த ஆண்டு ஆறாவது முறையாக பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார். மேலும் இந்த ஆண்டு மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளதால், முழு பட்ஜெட்டாக இல்லாமல் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது. மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளதால், பல்வேறு சலுகைகள் அளிப்பது பற்றிய அறிவிப்புகள் வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட்டை இன்னும் சற்று நேரத்தில் நாடாளுமன்ற மக்களவையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்ய உள்ளார். இந்த சூழலில் டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் தொடங்கியுள்ளது. இந்தக் கூட்டத்தில் மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட்டுக்கு ஒப்புதல் அளிக்கப்பட உள்ளது. இதற்காக மத்திய அமைச்சர்கள் இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டுள்ளனர்.

சார்ந்த செய்திகள்

Next Story

பிரதமரின் வெறுப்பு பிரச்சாரத்திற்கு எதிராக எஸ்.டி.பி.ஐ போராட்டம்! (படங்கள்)

Published on 27/04/2024 | Edited on 27/04/2024

 

ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாரா பரப்புரையில் பேசிய பிரதமர் மோடி, ''நாட்டின் சொத்தில் இஸ்லாமியர்களுக்கே முதல் அதிகாரம் என்று காங்கிரஸ் ஆட்சியில் சொன்னார்கள். இதனால் இந்துக்களின் சொத்துகள் போகிறது. இந்துக்களின் பணத்தை எடுத்து இஸ்லாமியர்களுக்கு கொடுக்க நினைக்கிறது காங்கிரஸ். இதன் பொருள் அவர்கள் இந்தச் செல்வத்தை அதிக குழந்தைகளைப் பெற்றவர்களுக்கும், ஊடுருவல்காரர்களுக்கும் பகிர்ந்தளிப்பார்கள்.

நீங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணம் ஊடுருவல்காரர்களுக்கு செல்ல வேண்டுமா? இதை நீங்கள் அங்கீகரிக்கிறீர்களா? பெண்கள் வைத்திருக்கும் தங்கத்தைக் கணக்கிட்டு, அந்தச் செல்வத்தை பங்கீடு செய்வோம் என்று காங்கிரஸின் தேர்தல் அறிக்கை கூறுகிறது. மன்மோகன் சிங் தலைமையிலான அரசு, முஸ்லீம்களுக்கு செல்வத்தில் முதல் உரிமை உண்டு என்று கூறியது. இந்த நகர்ப்புற நக்சல் சிந்தனை என் தாய்மார்கள் மற்றும் சகோதரிகளின் மாங்கல்யத்தைக் கூட விட்டுவைக்காது.." எனச் சர்ச்சையாக பேசினார். இஸ்லாமியர்கள் ஊடுருவல்காரர்கள் என நாட்டின் பிரதமர் மோடி பேசிய பேச்சுக்கு நாடு முழுவதும் பலத்த கண்டனம் எழுந்து வருகிறது. பிரதமர் மோடியின் இந்த பேச்சுக்கு தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சியினர் கூறிவருகின்றனர்.

இந்த நிலையில், மோடியின் மதவெறுப்பு பிரச்சாரத்தை கண்டித்து, எஸ்.டி.பி.ஐ கட்சியினர் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள இந்தியன் வங்கி அருகே பேரணியாக நடந்து சென்று  தேர்தல் ஆணையம் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டத்தை நடத்தினர். அப்போது எஸ்.டி.பி.ஐ கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட்ட  போராட்டக்காரர்களை போலீசார் குண்டு கட்டாக தூக்கி கைது செய்தனர்.

Next Story

“என்னை அழிக்க நடவடிக்கை” - உச்சநீதிமன்றத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் பதில்

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
 Arvind Kejriwal's response in the Supreme Court on Action to destroy

டெல்லி மதுபானக் கொள்கை வழக்கு தொடர்பாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு 9 முறை அமலாக்கத்துறை சார்பில் சம்மன் அனுப்பியும், அவர் ஆஜராகாமல் தவிர்த்து வந்தார். இது தொடர்பாக அவர் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு கடந்த மார்ச் மாதம் 21 ஆம் தேதி(21.03.2024) விசாரணைக்கு வந்தது. அப்போது அமலாக்கத்துறை நடவடிக்கைக்கு இடைக்காலத் தடை விதிக்க முடியாதென உயர்நீதிமன்றம் தெரிவித்திருந்தது. மேலும் முன் ஜாமீன் வழங்கவும் டெல்லி உயர் நீதிமன்றம் மறுத்திருந்தது. இதனையடுத்து அரவிந்த் கெஜ்ரிவால் அன்றைய தினமே (21.03.2024) அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். இதனையடுத்து அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு நீதிமன்றக் காவல் விதிக்கப்பட்டதைத் தொடர்ந்து அவர் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இதனையடுத்து அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஏப்ரல் 15 ஆம் தேதி வரை நீதிமன்றக் காவல் விதிக்கப்பட்டதைத் தொடர்ந்து அவர் திகார் சிறையில் அடைக்கப்பட்டார். இதற்கிடையே தன்னுடைய கைது நடவடிக்கையை ‘சட்டவிரோத கைது’ என அறிவிக்கக் கோரியும், ஜாமீன் கோரியும் கெஜ்ரிவால் தரப்பில் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம் கெஜ்ரிவால் ஜாமீன் மனுவைத் தள்ளுபடி செய்து கடந்த 9 ஆம் தேதி (09.04.2024) உத்தரவிட்டிருந்தது. அதனைத் தொடர்ந்து டெல்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் தன்னைக் கைது செய்ததை எதிர்த்து தாக்கல் செய்த மனுவை நிராகரித்த டெல்லி உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து அரவிந்த் கெஜ்ரிவால் உச்ச நீதிமன்றத்தில் கடந்த 10 ஆம் தேதி (10.04.2024) மேல்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்திருந்தார். 

இதனையடுத்து, இந்த வழக்கு நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா மற்றும் தீபாங்கர் தத்தா ஆகியோர் அடங்கிய அமர்வில் கடந்த 15ஆம் தேதி விசாரனைக்கு வந்த போது, ‘தன்னை தேர்தல் பிரச்சாரத்தில் இருந்து தடுப்பதற்காகவே இந்த கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது’ என அரவிந்த் கெஜ்ரிவால் தரப்பில் வாதிடப்பட்டது. இதனை பதிவை செய்து கொண்ட நீதிமன்றம், இந்த வழக்கு குறித்து அமலாக்கத்துறை பதிலளிக்குமாறு நோட்டீஸ் அனுப்பியது. அந்த நோட்டீஸுக்கு பதிலளித்த அமலாக்கத்துறை, ‘அரவிந்த் கெஜ்ரிவால் தான் இந்த வழக்கின் முக்கிய குற்றவாளியாக நாங்கள் கருதுகிறோம். எங்களுடைய விசாரணைக்கு அரவிந்த் கெஜ்ரிவால் ஒத்துழைப்பு தரவில்லை. அதனால், இந்த மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்’ எனத் தெரிவித்து கோரிக்கையை முன்வைத்தது. 

 Arvind Kejriwal's response in the Supreme Court on Action to destroy

இந்த நிலையில், அமலாகக்த்துறை அளித்த அந்த பதிலுக்கு டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உச்சநீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்துள்ளார். அதில் , ‘அரசியல் எதிரிகளை பழிவாங்குவதற்காக அமலாக்கத்துறையை மத்திய அரசு பயன்படுத்துகிறது. தேர்தல் நேரத்தில் அரசியல் செயல்பாடுகள் உச்சத்தில் இருக்கும். அந்த நேரத்தில் அவர்களுக்கு சமமான அரசியல் எதிரியான அரவிந்த் கெஜ்ரிவாலை கைது செய்ததன் மூலம், தேர்தல் சமநிலையை குலைக்க மத்திய அரசு முயல்கிறது.

அரவிந்த் கெஜ்ரிவாலை கைது செய்து கட்சிப் பணிகளை முடக்க மத்திய அரசு முயற்சி செய்து வருகிறது. கெஜ்ரிவால் கைது மூலம் சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தல் முறை என்பது கேள்விக்குறியாகியுள்ளது. இந்த கைது முழுக்க முழுக்க அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையாகும். அதுமட்டுமல்லாமல், அரவிந்த் கெஜ்ரிவால் என்ற தனி மனிதனையும், ஆம் ஆத்மி கட்சியையும் அழிப்பதற்கான யுக்தியாகத் தான் இந்த கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதனால், கெஜ்ரிவாலை உடனடியாக சிறையில் இருந்து விடுவிப்பதற்கான உத்தரவை பிறப்பிக்க வேண்டும்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.