Skip to main content

டெல்லி சட்டப்பேரவைத் தேர்தல்; ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் - இன்று வாக்கு எண்ணிக்கை!

Published on 08/02/2025 | Edited on 08/02/2025

 

Delhi Assembly Elections Erode East By Election Vote Counting Today

70 சட்டமன்றத் தொகுதிகள் கொண்ட டெல்லி சட்டப்பேரவை தேர்தல் கடந்த 5ஆம் தேதி (05.02.2025) ஒரே கட்டமாக நடைபெற்றது. தேசிய அளவில் இந்தியா கூட்டணியில் உள்ள ஆம் ஆத்மி மற்றும் காங்கிரஸ் கட்சிகள், இந்த தேர்தலில் தனித்துப் போட்டியிட்டன. இதனால் ஆம் ஆத்மி, காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க என மும்முனை போட்டி நிலவியது. இந்நிலையில் டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று (08.02.2025) காலை எண்ணப்படுகின்றன.

முன்னதாக கடந்த 2015 மற்றும் 2020ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தல்களில் தனித்து களம் கண்டு பெரும்பான்மையுடன் ஆம் ஆத்மி ஆட்சி அமைத்தது குறிப்பிடத்தக்கது. கடந்த 27 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் டெல்லியில் பா.ஜ.க .ஆட்சியைப் பிடிக்கும் என பெரும்பாலான கருத்துக் கணிப்புகளில் தகவல் வெளியாகியிருந்தது. அதே சமயம் ஈரோடு கிழக்கு தொகுதி சட்டப் பேரவை உறுப்பினராக இருந்த ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் மரணம் அடைந்ததைத் தொடர்ந்து, இந்த தொகுதிக்குக் கடந்த 5ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. திமுக சார்பில் வி.சி.சந்திரகுமார், நாம் தமிழர் கட்சி சார்பில் மா.கி. சீதாலட்சுமி என 46 பேர் போட்டியிட்டனர்.

முக்கிய எதிர்க்கட்சிகளான அதிமுக, தேசிய கட்சியான பாஜக,  தேமுதிக,  த.வெ.க. உள்ளிட்டவை இந்த இடைத்தேர்தலைப் புறக்கணித்தன. இந்நிலையில் இந்த இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்படுகின்றன. சித்தோட்டில் உள்ள அரசு பொறியியல் கல்லூரியில் காலை 8 மணிக்குத் தபால் வாக்குகள்,  எண்ணப்படுகின்றன. அதனைத் தொடர்ந்து காலை 08.30 மணிக்கு மின்னணு வாக்குகள் எண்ணப்பட உள்ளன. மொத்தம் 14 மேசைகளில் வாக்கு எண்ணும் பணியில் 51 பேர் ஈடுபட உள்ளதாகத் தேர்தல் ஆணையம் தகவல்  தெரிவித்துள்ளது. 17 சுற்றுகளாக வாக்குகள் எண்ணப்பட உள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகப் பாதுகாப்புப் பணியில் சுமார் 600 போலீசார் ஈடுபட்டுள்ளனர். 

சார்ந்த செய்திகள்