Skip to main content

இஸ்ரேலுக்கு ஆதரவு அளித்த தயாரிப்பு நிறுவனங்களுக்குத் தடை விதித்த துருக்கி!

Published on 08/11/2023 | Edited on 08/11/2023

 

Turkey banned production companies that supported Israel

 

இஸ்ரேல் - ஹமாஸ் அமைப்பினர் இடையேயான போர் ஒரு மாதத்தைக் கடந்துள்ள நிலையில், நிலைமை நாளுக்கு நாள் மோசமாகி வருகிறது. கடந்த அக்டோபர் 7 ஆம் தேதி காசாவிலிருந்து ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மீது நடத்திய தாக்குதலில் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்தனர். இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இஸ்ரேல் அதிதீவிரமான தாக்குதலை நடத்தி வருகிறது. இப்படியாக இரு தரப்பிலிருந்து ஆயிரக்கணக்கான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. இதனிடையே காசாவை சுற்றி வளைத்து தனது பீரங்கி குண்டுகளால் காசா நகரையே இஸ்ரேல் நிர்மூலமாக்கிக் கொண்டிருக்கிறது.

 

தரைவழித் தாக்குதலைத் தீவிரப்படுத்திய இஸ்ரேல், கிட்டத்தட்ட அனைத்து தொலைத் தொடர்பு சேவைகளை அழித்து உலகத்திலிருந்து காசாவை தனிமைப்படுத்தியுள்ளது. ஹமாஸ் அமைப்பினரை ஒருவர் விடாமல் அழிக்க நினைக்கும் இஸ்ரேலின் தாக்குதலில் ஆயிரக்கணக்கான அப்பாவி பாலஸ்தீன மக்கள் தினந்தோறும் கொல்லப்பட்டு வருகின்றனர். இதுவரை 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அப்பாவி பாலஸ்தீன மக்கள் கொல்லப்பட்டுள்ளதாகவும், அதில் 60 சதவீதம் பேர் பெண்களும், குழந்தைகளும் எனக் கூறப்படுகிறது. 

 

இந்தத் தாக்குதலில் நூற்றுக்கணக்கான அப்பாவி மக்கள் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதற்கு எகிப்து, ஜோர்டான், சவுதி அரேபியா ஆகிய நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. கடந்த சில நாள்களுக்கு முன்பு இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலுக்குப் பதிலடியாக இஸ்ரேலுக்கான தனது தூதரை திரும்பப் பெறுவதாக பஹ்ரைன் நாட்டு நாடாளுமன்றம் தெரிவித்திருந்தது. 

 

இந்த நிலையில் இஸ்ரேலுக்கு ஆதரவு அளித்ததாகக் கூறிய கோகோ கோலா மற்றும் நெஸ்லே ஆகிய தயாரிப்பு பொருள்களுக்கு துருக்கி நாடாளுமன்றம் தடை விதித்துள்ளது. இது குறித்து துருக்கி நாடாளுமன்றம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள உணவகங்கள், சிற்றுண்டிச் சாலைகள் மற்றும் தேநீர் விடுதிகளில் இஸ்ரேலை ஆதரிக்கும் நிறுவனங்களின் தயாரிப்புகள் இனிமேல் விற்கப்படாது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. நாடாளுமன்ற சபாநாயகர் எடுத்த இந்த முடிவில் எந்த நிறுவனங்கள் தொடர்புடையவை என அடையாளப்படுத்தவில்லை. மேலும், பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று கோகோ கோலா மற்றும் நெஸ்லே தயாரிப்புகளை விலக்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது. 

 

 

சார்ந்த செய்திகள்