Skip to main content

ஸ்டெர்லைட் ஆலைக்கான மின்இணைப்பு துண்டிப்பு!

Published on 24/05/2018 | Edited on 24/05/2018


தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிர்ப்பு வலுத்துள்ள நிலையில் ஸ்டெர்லைட் ஆலைக்கான மின்இணைப்பை துண்டித்து தமிழக அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்தில் செயல்பட்டு வரும் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த 22ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட பேரணியாக சென்ற பொதுமக்களை போலீசார் தடியடி மற்றும் கண்ணீர்புகைக் குண்டுகளை பயன்படுத்தி கலைக்க முயற்சி செய்தனர். இதில் போலீசார் மற்றும் பொதுமக்களிடையே கடும் மோதல் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து போலீசார் துப்பாக்கி சூடு நடவடிக்கையில் ஈடுபட்டனர். போலீசாரின் துப்பாக்கிச்சூட்டில் 2 பெண்கள் உட்பட 11 பேர் உயிரிழந்தனர். மேலும் காயமடைந்த பலர் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதைதொடர்ந்து, இரண்டாவது நாளாக நேற்றும் போலீசார் பொதுமக்களிடையே மீண்டும் மோதல் போக்கு நீடித்து வந்தது. இதைத்தொடர்ந்து போலீசார் கண்ணீர்புகைக் குண்டுகளையும், ரப்பர் குண்டுகளையும் பயன்படுத்தி கலைக்க முயற்சி செய்தனர். அப்போது பொதுமக்கள் கல்வீச்சில் தூத்துகுடி மாவட்ட எஸ்.பி. மற்றும் 10க்கும் மேற்பட்ட போலீசாருக்கு காயம் ஏற்பட்டது. கல்வீச்சை தொடர்ந்து போலீசார் மீண்டும் நடத்திய துப்பாக்கி சூட்டில் ஈடுபட்டனர். போலீசாரின் துப்பாக்கி சூட்டில் காளியப்பன் (22) என்ற இளைஞர் ஒருவர் சம்பவ இடத்திலையே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் படுகாயமடைந்த 5 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதனிடையே, தூத்துக்குடி துப்பாக்கி சூடு தகவல்கள் உடனுக்குடன் சமூகவலைதளங்களில் பரவுவதால் இதனை தடுக்கும் போக்கு, மாநில உள்துறை அமைச்சகம் உத்தரவின் பேரில் நெல்லை, தூத்துக்குடி, குமரி உள்ளிட்ட 3 மாவட்டங்களில் இணையதள சேவை முற்றிலும் முடக்கப்பட்டுள்ளது. இதனால் தூத்துக்குடியில் தொடர்ந்து பதற்று சூழல் நீடித்து வருகிறது.

இந்நிலையில், ஸ்டெர்லைட் ஆலைக்கு பொதுமக்களிடையே எதிர்ப்பு வலுத்துள்ள நிலையில் ஸ்டெர்லைட் ஆலைக்கான மின்இணைப்பை துண்டித்து தமிழக அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. மாசு கட்டுப்பாடு வாரியத்தின் அறிவுறுத்தலின் பேரில் ஆலைக்கான மின்இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

முன்னதாக கடந்த மார்ச் 31ஆம் தேதியோடு ஸ்டெர்லைட் ஆலைக்கு அளிக்கப்பட்டிருந்த அனுமதியானது முடிவடைந்தது. இதனையடுத்து அனுமதியை புதுப்பிக்க ஸ்டெர்லைட் நிர்வாகம் தாக்கல் செய்திருந்த மனுவை மாசுகட்டுபாடு வாரியம் நிராகரித்தது. ஸ்டெர்லைட் ஆலைக்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், தற்போது ஆலைக்கான மின்இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது.

சார்ந்த செய்திகள்