Skip to main content

மனித எலும்பு சர்ச்சை! முதியோர் இல்லம் மூடல் பின்னணி இதுதான்!

Published on 28/02/2018 | Edited on 28/02/2018
saint

 

  ‘மனித எலும்புகளை வெளிநாட்டுக்கு கடத்துகிறார்கள்’ இந்தியாவிலேயே இப்படியொரு சர்ச்சை கிளம்பியிருப்பது காஞ்சிபுரம் மாவட்டம் பாலேஸ்வரம் கிராமத்திலுள்ள செயிண்ட் ஜோசப் இல்லம்தான். தமிழகத்தையே அதிரவைத்த இல்லம் தற்போது மூடப்படும் நிலைக்கு தள்ளப்பட்டதற்கு என்ன காரணம் என்ற விசாரணையில் இறங்கினோம்…


              

செயிண்ட் ஜோசப் இல்லம் வெறும் முதியோர் இல்லம் அல்ல.  இறக்கும் தருவாயில் உறவினர்களால் கைவிடப்பட்ட, ஆதரவற்ற, தெருவில் வீசப்பட்டவர்களை அழைத்துசென்று பாதுகாத்து பராமரிக்கும் இல்லம். இதற்கு, Hospice என்று பெயர். நோய்வாய்ப்பட்டு இறக்கும் தருவாயில் கிடக்கும் முதியோர்கள் குறித்து,  சென்னை கமிஷனர் அலுவலகத்திலுள்ள முதியோர் உதவி எண்  1253 என்ற எண்ணுக்கு தொடர்புகொண்டு புகார் அளித்தால் ஹெல்பேஜ் தொண்டு நிறுவனத்தின் மூலம் பெரும்பாலும் செயிண்ட் ஜோசப் இல்லம், லிட்டில் ட்ராப்ஸ் இல்லங்களுக்குத்தான் கொண்டுசெல்லப்படும். முதியோர் காப்பகங்கள் அதிகமாக இருந்தாலும் இறக்கும் தருவாயில் உள்ளவர்களை பாதுகாத்து பராமரிக்கும் இல்லங்கள் தமிழகத்தில் இல்லை. நோய்வாய்ப்பட்டு இறக்கும் தருவாயில் உள்ளவர் ஒருவர் நமது வீட்டில் இருந்தால் நமது வீடு எப்படியிருக்கும் என்பது நமக்கு தெரியும். இதுபோன்ற இல்லங்களில் 500 க்குமேற்பட்டவர்களை ஓரிடத்தில் வைத்து பாதுகாப்பது என்பது சர்வசாதாரண விஷயம் அல்ல.  ‘பிணவறைக்குள்ள போய்ட்டு வர்றமாதிரி இருக்கு’ என்று குமட்டிக்கொண்டு சொல்பவர்கள் உண்டு. அப்படிப்பட்டவர்களை பாதுகாத்து பராமரிக்கும் சேவையை செய்பவர்களை நாம் இதயப்பூர்வமாக பாராட்டி ஊக்குவிக்கவேண்டும். ஆனால், செயிண்ட் ஜோசப் இல்ல நிர்வாகி ஃபாதர் தாமஸ் செய்த குற்றங்கள் என்ன?

 

1) ஒருமுறை  இந்த இல்லத்தில் ஒருவரை சேர்த்துவிட்டால் அவரை திரும்பிப்போய்  ‘விசிட்’ பண்ணவே முடியாது என்பதுதான் ஃபாதர்  தாமஸின் கட்டளை. அதுவே, சாசணம். வேறு, முதியோர் இல்லத்திலிருந்து இந்த இல்லத்தில் சேர்க்கப்பட்டிருந்தாலும் மறுபடியும் வெளியில் கொண்டுசெல்லமுடியாது.

 

2)  ஒருவர்  ஆதரவற்றவர் என்றாலே அவர் அரசாங்கத்திற்கு சொந்தமானவர். அவரை, ஒரு இல்லத்தில் சேர்ப்பதற்குமுன்  புகைப்படம் எடுத்து அந்த விவரங்களை லோக்கல் காவல்நிலையத்திற்கு தெரியப்படுத்தவேண்டும். ஆனால், பல வருடங்களாக ஃபாதர் தாமஸ் தெரியப்படுத்தவில்லை என்பது குற்றச்சாட்டு.

3) மருத்துவமனைக்கு அழைத்துசெல்லும்போது ஒருவர் இறந்துவிட்டால் அவரது உடலை பிரேதபரிசோதனை செய்தபிறகுதான் அந்த மருத்துவமனை இறப்பு சான்றிதழை வழங்கும். ஒருவேளை, அது இயற்கை மரணம்தான் என்று இரத்த சொந்தங்கள் சொன்னாலும் யாராவது ஒரு மருத்துவர் அவரது இறப்பு இயற்கையானது என்று சான்றிதழ் அளித்தால்தான் புதைக்கவே முடியும். அப்படி, மீறி புதைத்தால் அது சட்டப்படி குற்றம். அப்படியிருக்க,  இல்லத்தில் பரமாரிக்கப்படுபவர்  இறந்துவிட்டால்  அந்த இறப்பை  டாக்டர்கள்  மூலம்  உறுதி  செய்து சான்றிதழ் பெறவேண்டுமல்லவா? அப்படி, செயிண்ட் ஜோசப்  இல்லத்தில்  நடந்த  மரணங்களுக்கு எந்தெந்த மருத்துவர்கள் சான்றிதழ் அளித்தார்கள் என்பது கேள்விக்குறி. 

 

 4) ஆதரவற்ற  பிணங்களை அடக்கம் செய்யவேண்டும்  என்றால்  பஞ்சாயத்து/  நகராட்சி/ மாநகராட்சிகளுக்கு தகவல் தெரிவிக்கவேண்டும். அதேபோல், பிணத்தை ப்ளாஸ்டிக்  பேப்பரால் சுற்றி ஆறு மாதங்களுக்கு அழுகாதபடி  பேக்-அப்  செய்து புதைத்து அதற்கான ஐ.பி. எண்ணை வாங்கிவைத்துக்கொள்ளவேண்டும்.


 
5)  திடீரென்று முதியவரின் மரணத்தில் சந்தேகம் இருக்கிறது என்று அவரது உறவினர்கள் யாராவது  வந்து கேட்டால் அந்த ஐ.பி. நம்பரை வைத்து அவரது முழுமையான விவரங்களை தெரியப்படுத்தவேண்டும்.

 

6) ஆதரவற்ற நோய்வாய்ப்பட்ட முதியவர்களை தங்கவைக்கும்போது அவர்களுக்கு முறையான  மருத்துவ  சிகிச்சை  தேவை. எத்தனை மருத்துவர்கள், நர்ஸுகள், இருக்கிறார்கள் என்கிற முறையான தகவல் இல்லை.

 

7)  முதியவர்களையும் மனநலம் பாதிக்கப்பட்டவர்களையும் ஒரே இடத்தில் வைக்கக்கூடாது. ஆனால்,  இந்த இல்லத்தில் ஒரே இடத்தில் வைத்திருக்கிறார்கள். மேலும், குழந்தைகளும் சட்டத்துக்குப்புறம்பாக தங்கவைக்கப்பட்டிருக்கிறார்கள். இதனால், முதியவர்களிடமுள்ள நோய்கள் அக்குழந்தைகளுக்கு தொற்றும் ஆபத்து ஏற்படும்.


 
8)  ஒரு முதியவர் மீட்கப்படுகிறார் என்றால் அரசாங்கத்திலேயே 1253 முதியோர் உதவி(old age helpline) எண்   உள்ளது. அதன்மூலம்தான் மீட்கப்பட்டு இதுபோன்ற இல்லங்களில் சேர்க்கப்படுகிறார்கள். அப்படி,  எந்த நேரத்தில் யார் மூலம் மீட்கப்பட்டார்கள் என்கிற விவரங்கள் வைத்திருக்கவேண்டும்.


 
9)  பிணங்களை  சுவற்றுக்குள் வைத்து பூசிவிடுகிறார்கள். அது, பல ஆடி ஆழத்துக்குள் சென்று விழுந்துவிடும். இதனால், வெப்பமாகி  உடல் அழுகிவிடும். ஆனால், எலும்பு அழியாது. அப்படியென்றால், எலும்பை கடத்தி வெளிநாட்டிற்கு விற்கிறார்களா? என்ற சர்ச்சைக்குரிய குற்றச்சாட்டு எழுவதற்கு காரணமே மேற்கண்ட விதிமுறைகளை கடைபிடிக்காமல் சடத்துக்குப்புறம்பாக செயல்பட்டதுதான்.


 
10)             உண்மையில், மனித எலும்புகளை  வெளிநாட்டுக்கு கடத்தி கால்சியம் தயாரிப்பதற்கு ஆகும் ஏற்றுமதி செலவுகளைவிட  குறைந்த  நடைமுறையில்  முட்டை ஓடு, மட்டி கிளிஞ்சல்கள்  என  மாற்று மிக சுலபமான வழிகள் உள்ளன. மேலும், மனித எலும்புகளை ஏற்றுமதி செய்வதற்கு சட்டமும் இல்லை.  உடலுறுப்புகளை எடுத்து வெளிநாடுகளுக்கு அனுப்பி உடனடியாக  யார் உயிரையும் காப்பாற்றமுடியாது.  ஒருவேளை, உறுப்புகளை  எடுத்து  வெளிநாட்டுக்கு அனுப்பி பாதுகாத்து  மாணவர்களுக்கு  பாடம் நடத்தலாம் அவ்வளவுதான். ஆனால், இதெல்லாம் எந்தளவுக்கு சாத்தியம் என்பது கேள்விக்குறி. சட்டத்தையும் நடைமுறையையும் சரியாக கடைபிடித்து வெளிப்படைத்தன்மையோடு ஃபாதர் தாமஸ் செயல்பட்டிருந்தால் கருணையில்லமாகவே இருந்திருக்கும். ஆனால், சட்ட திட்டங்களுக்கு உட்படாமல் சர்வதிகாரியாக செயல்படும்போதுதான் கருணையற்ற இல்லமாய் காட்சியளிக்கிறது செயிண்ட் ஜோசப் இல்லம்! இதை, பா.ஜ.கவினரும் ஆர்.எஸ்.எஸ்.க்காரர்களும் தங்களுக்கான அரசியல் ஆதாயத்துக்காக பயன்படுத்திக்கொண்டு பூதாகாரமாக்கி இல்லத்தையும் மூடவைத்துவிட்டார்கள்.
 

hospital


இதுகுறித்து,  நோய்வாய்பட்ட, உறவினர்களால் கைவிடப்பட்ட முதியோர்களை பாதுகாத்து பராமரிக்கும் சேவையை செய்துவரும் ஹெல்ப் ஏஜ் இந்தியா தொண்டு நிறுவனத்தின் துணைத்தலைவருமான முனைவர் சத்யபாபு நம்மிடம், “மத்திய அரசின் ஹோம்லெஸ் ஹோம் திட்டத்தின் மூலம் தமிழகத்தில், சென்னை, காஞ்சிபுரம், திருச்சி, கடலூர் என  20 நகராட்சிகளில் தற்போது முதியோர் காப்பகங்களை உருவாக்கியிருக்கிறது தமிழக அரசு. ஆனால், இறக்கும் தருவாயில் உள்ளவர்களை  பாதுகாக்க அரசாங்கம் காப்பகங்களை உருவாக்கவில்லை. கடந்த, திமுக ஆட்சியில் முதியோர்களுக்கான ஹாஸ்பிஸ்(Hospice) படப்பையில் இடம் ஒதுக்கியது. இதுவரை, அந்த இடத்தில் கட்டப்படவில்லை. இதுகுறித்த விழிப்புணர்வும் இல்லாததாலதான் மக்கள் மத்தியில் அச்சம் ஏற்படுகிறது. இதுபோன்ற இல்லங்களை  தனியார் தொண்டு அமைப்புகளுடன் இணைந்து முறையாக நடத்த  ஸ்டேட் எக்ஸ்பெட் கமிட்டியை உருவாக்கவேண்டும். இதுபோன்ற, இல்லங்களில் பொதுமக்கள் அல்லது ஊர் முக்கியஸ்தர்கள், சமூக ஆர்வலர்களும் இருக்கவேண்டும். அப்போதுதான், தனியார் இல்லங்களில் என்ன நடக்கிறது என்பது தெரியும். விதிமுறைகளுடன் செயல்படுகிறதா என்பதை சமூக நலத்துறை அதிகாரிகள் தொடர்ச்சியாக முறையாக கண்காணிக்கவேண்டும்.  வெளிப்படை தன்மையுடன் செயல்பட்டால் இதுபோன்ற சேவைகளில் சர்ச்சைகள் நுழையாது” என்கிறார் அவர்.
 

சார்ந்த செய்திகள்