Skip to main content

திரிபுராவில் லெனின் சிலையை இடித்துத் தள்ளிய பா.ஜ.க.வினர்!

Published on 06/03/2018 | Edited on 06/03/2018

திரிபுரா மாநிலத்தில் ஆட்சியைப் பிடித்துள்ள நிலையில், விளாதிமிர் லெனின் சிலையை பா.ஜ.க.வினர் இடித்துத் தள்ளும் காட்சிகள் வைரலாகி வருகின்றன.

 

திரிபுரா மாநிலத்தில் நடந்துமுடிந்த சட்டமன்றத் தேர்தலுக்கான முடிவுகள் கடந்த 3ஆம் தேதி வெளியிடப்பட்டன. மொத்தம் 59 தொகுதிகளில் நடைபெற்ற இந்தத் தேர்தலில் பா.ஜ.க. கூட்டணி 43 இடங்களிலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 16 இடங்களிலும் வெற்றிபெற்றன. 

 

Lenin

 

இதன்மூலம், கடந்த 25 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த சி.பி.எம். கட்சி தன் அதிகாரத்தை இழந்தது. இதைத் தொடர்ந்து, அம்மாநிலம் முழுவதும் உள்ள சி.பி.எம். அலுவலகங்கள் மீது பா.ஜ.க.வினர் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

 

மேலும், திரிபுரா மாநிலம் பெலோனியா பகுதியில் உள்ள கல்லூரி சதுக்கப் பகுதியில் சி.பி.எம். ஆட்சியில் வைக்கப்பட்ட ரஷ்யப் புரட்சியாளர் விளாதிமிர் லெனினின் சிலையை மாற்றத்தை உண்டாக்குவோம் (சலோ பால்டாய்) என்ற டி-சர்ட் அணிந்திருந்த பா.ஜ.க.வினர் புல்டோசர் மூலம் இடித்துத் தள்ளினர். அப்போது அவர்கள் பாரத் மாதா கீ ஜே எனவும் கோஷம் எழுப்பினர். 

 

 

 

 

சலோ பால்டாய் என்பது பா.ஜ.க. தேர்தல் பிரச்சாரத்தின் போது பயன்படுத்திய வாசகம் ஆகும். பா.ஜ.க.வின் வடகிழக்கு மாநிலங்களுக்கான பொறுப்பாளர் ராம் மாதவ், ‘பொதுமக்கள் லெனினின் சிலையை அகற்றுகிறார்கள்.. இது ரஷ்யாவில் அல்ல; திரிபுராவில். மாற்றத்தை உண்டாக்குவோம் (சலோ பால்டாய்)’ என தன் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். இந்த பதிவிற்கு பலரும் கண்டனங்கள் தெரிவித்த நிலையில், அவர் அதை நீக்கிவிட்டார்.

 

முன்னதாக, திரிபுரா மாநிலத்தில் இருக்கும் சாலைகளுக்கு வைக்கப்பட்டிருக்கும் கம்யூனிஸ்ட் தலைவர்களின் பெயர்களை நீக்கிவிட்டு, உள்ளூர் மற்றும் உள்நாட்டு தலைவர்களின் பெயர்களை வைப்போம் என பா.ஜ.க.வினர் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

சார்ந்த செய்திகள்