உரிய அனுமதி பெற்ற பின்னரே ட்ரெக்கிங் சென்றோம் என்றும் வனத்துறையிடம் முறையான கட்டணம் செலுத்திய பிறகே குழுவினர் அனுமதிக்கப்பட்டனர் என குரங்கணி பயணம் குறித்து சென்னை டிரெக்கிங் கிளப் விளக்கமளித்துள்ளது.
குரங்கணி காட்டுத் தீ விபத்தில் சிக்கி இதுவரை 11 பேர் உயிரிழந்துள்ள நிலையில் சென்னை டிரெக்கிங் கிளப் அளித்துள்ள விளக்கத்தில்,
மகளிர் தினத்தையொட்டி, மலையேற்ற பயிற்சிக்கு ஏற்பாடு செய்தோம். உரிய அனுமதி பெற்ற பின்னரே ட்ரெக்கிங் சென்றோம். வனத்துறையிடம் முறையான கட்டணம் செலுத்திய பிறகே குழுவினர் அனுமதிக்கப்பட்டனர்.
பயணத்தை தொடங்கும் போது காட்டுத் தீக்கான அறிகுறி எதுவும் இல்லை. 11ம் தேதி மாலையில் கீழே இறங்கும் போது புற்களுக்கு விவசாயிகள் தீ வைத்ததை குழுவினர் பார்த்தனர். பலமான காற்று வீசியதால் காட்டுத் தீ மளமளவென பரவத் தொடங்கியது.
தீயில் சிக்கி உயிருக்கு போராடிய 3 பேரை திவ்யா முத்துக்குமரன் காப்பாற்றினார். மீண்டும் மற்றவர்களை காப்பாற்ற முற்பட்ட போது தீயில் சிக்கி திவ்யா உயிரிழந்தார். காட்டுத் தீயில் சிக்கி உயிரிழந்தோருக்கு இரங்கல் தெரிவித்துக்கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்தனை செய்கிறேன் என அதில் கூறப்பட்டுள்ளது.