வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில் தலைமை செயலாளர் ஆலோசனை மேற்கொண்டுள்ளார்.
வடகிழக்கு பருவமழை இன்னும் இரு நாட்களில் தொடங்க உள்ளது. இந்நிலையில் தமிழக தலைமைசெயலாளர் சிவ் தாஸ் மீனா தலைமைச் செயலகத்தில் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். இந்த ஆலோசனை கூட்டத்தில் தமிழகம் முழுவதும் நடைபெற்று வரும் சாலை மேம்பாட்டுத் திட்டங்கள், சென்னையில் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் பணிகள் தொடர்பாக ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.
முன்னதாக வானிலை ஆய்வு மையத்தின் தென்மண்டல இயக்குநர் பாலச்சந்திரன் நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் வடகிழக்கு பருவமழை தொடங்குவது குறித்து தெரிவிக்கையில், “இன்று (19.10.2023) முதல் நாடு முழுவதிலும் இருந்து தென்மேற்கு பருவமழை முழுமையாக விலகியது. வடகிழக்கு பருவமழை அடுத்த 3 நாட்களில் தொடங்குகிறது. தற்பொழுது அரபிக் கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவுகிறது. மேலும் அக்டோபர் 21 ஆம் தேதி வங்கக்கடலில் உருவாகும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் அக்டோபர் 23 இல் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும். இந்த 2 காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக வடகிழக்கு பருவமழை துவக்க நிலையில் வலு குறைந்து காணப்படும்” என தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.