கரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இருந்தபோதிலும் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், மத்திய மற்றும் மாநில அரசுகள் கரோனா தடுப்பு நடவடிக்கைகளை முடுக்கிவிட்டுள்ளன. அதன் ஒரு பகுதியாக பல்வேறு மாவட்டங்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் தமிழகத்தில் ஊரடங்கை நீட்டிப்பது குறித்து சென்னை தலைமைச் செயலகத்தில் 40 ஐஏஎஸ் அதிகாரிகளுடன் முதல்வர் பழனிசாமி ஆலோசனை நடத்தி வருகிறார். இந்த ஆலோசனையில் கரோனா தடுப்பு பணிகளை ஒருங்கிணைக்க அமைக்கப்பட்ட 12 குழுக்களைச் சேர்ந்த அதிகாரிகளும் பங்கேற்றுள்ளனர்.
அப்போது பேசிய முதல்வர் பழனிசாமி, "கரோனா நோயின் தீவிரம் பற்றி அறியாமல் மக்கள் விளையாட்டுத்தனமாக இருக்கின்றனர். பொதுமக்களும் ஒத்துழைப்பு கொடுத்தால் மட்டுமே கரோனா பரவலைத் தடுக்க முடியும். காய்கறி சந்தைகளில் மக்கள் தனிமனித இடைவெளியைக் கடைபிடிப்பதில்லை. கரோனா குறித்து காவல்துறையும், உள்ளாட்சித்துறையும் ஒலிபெருக்கி மூலம் வீதிவீதியாகத் தெரிவிக்க வேண்டும். ஸ்பெயின், இத்தாலி போன்ற நாடுகளில் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து மக்களுக்கு எடுத்துரைக்க வேண்டும். தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள அதிகாரிகளின் செயல்பாடு பாராட்டத்தக்கது" என்றார்.