இந்த கரோனா பரபரப்புக்கு நடுவிலும், ஜெயலலிதாவின் போயஸ்கார்டன் இல்லமான ’வேதா இல்லத்தை’க் கையப்படுத்துவதற்கான அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார் சென்னை மாவட்ட ஆட்சியரான பிரகாஷ். இங்கு அரசு சார்பில் ஜெ’வின் நினைவில்லம் அமைக்கப்பட்டு, அது பொதுமக்களின் பார்வைக்காக விரைவில் திறக்கப்பட இருக்கிறது.
ஜெ’ தனது கடைசிக் காலம் வரை இந்த வேதா இல்லத்தில்தான் தன் தோழி சசிகலாவுடன் வாழ்ந்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அங்கிருந்துதான் அவர் அப்பல்லோவுக்குக் கொண்டுசெல்லப்பட்டு, அவர் அங்கேயே மரணமடைந்தார்.
ஜெ‘ வின் மர்ம மரணத்துக்குப் பிறகு, இந்த இல்லத்திலேயே தங்கியிருந்த சசிகலா, இந்த இல்லத்தைத் தானே கைப்பற்ற பெரும் முயற்சி எடுத்தார். இந்த நிலையில் அவர் சொத்துக்குவிப்பு வழக்கில் கைதாகி, பெங்களூர் சிறைக்குச் சென்ற பிறகு, அவரது முயற்சிகள் மெல்ல மெல்லத் தோற்றுப்போனது. இருந்தும் ஜெ’வின் அண்ணன் மகன் தீபக்கைத் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டும் முயன்று பார்த்துவிட்டு, அதிலும் சசிகலா தரப்பு தோற்றது.
இந்த நிலையில் ஜெ’வின் அண்ணன் மகள் தீபாவும், அவர் சகோதரர் தீபக்கும் இணைந்து, வேதா இல்லத்துக்கு நாங்கள்தான் வாரிசு என்று சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடுத்தனர். இதற்கிடையே, கடந்த 2017 ஆகஸ்டில் ஜெ’வின் வேதா இல்லம் அவரது நினைவில்லம் ஆக்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிக்க, அது தொடர்பான முயற்சிகள் வேகமெடுத்தன. அந்த இல்லத்தைக் கையக்கப்படுத்துவதற்கான கருத்துக் கேட்புக் கூட்டங்களும் அரசு சார்பில் நடத்தப்பட்டன. இந்த நிலையில்தான் இப்போது, சென்னை மாவட்ட ஆட்சியரான பிரகாஷ், வேதா இல்லம் கைப்பற்றப்படும் என்ற அறிவிப்பை இன்று அதிகாரப்பூர்மாக வெளியிட்டிருக்கிறார்.
அந்த அறிவிப்பில், இந்த இல்லத்தை எடுப்பதால் பாதிப்புக்குள்ளாகும் குடும்பங்கள் என்று எதுவும் இல்லை. அதனால் அங்கிருந்து யாரையும் அப்புறப்படுத்தவோ அல்லது மறுபடியும் அங்கே குடியமர்த்தவோ எந்த அவசியமும் ஏற்படவில்லை என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. மேலும் ஜெ’வின் வேதா இல்லத்தில் 3 அடுக்கு கட்டிடம் இருப்பதாகவும், மேலும் அங்கே 2 மா மரங்கள், ஒரு பலா மரம், 5 தென்னை மரங்கள் மற்றும் 5 வாழை மரங்கள் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இது அ.தி.மு.க.வினர் மத்தியில் பெரும் ஆர்வம் கலந்த பரபரப்பை ஏற்படுத்த, கரோனா காலகட்டத்திலும் எடப்பாடி அரசு, இந்த விவகாரத்தில் காட்டிவரும் வேகத்தைக் கண்டு, ஜெ’வின் அண்ணன் மகள் தீபா தரப்பு பெரும் அதிர்ச்சியில் மூழ்கியிருக்கிறது.