Skip to main content

பா.ஜ.க. கூட்டணியில் இருந்து விலகுகிறாரா நிதீஷ்குமார்?

Published on 08/03/2018 | Edited on 08/03/2018

தெலுங்கு தேசம் கட்சி பா.ஜ.க. கூட்டணியில் இருந்து விலகியதைப் போல, ஐக்கிய ஜனதா தளம் கட்சியும் விலகுமா என்ற கேள்விகள் எழுந்துள்ளன. 

 

ஆந்திரப்பிரதேசம் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கக்கோரி அம்மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு, மத்திய அரசிடம் பலமுறை கோரிக்கை விடுத்தார். நாடாளுமன்றத்திலும் தெலுங்கு தேசம் கட்சியின் எம்.பி.க்கள் இந்தக் கோரிக்கையை முன்வைத்து வந்தனர். ஆனால், அதை மத்திய அரசு கண்டுகொள்ளவில்லை. இந்நிலையில், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து வெளியேறப்போவதாக அறிவித்த சந்திரபாபு நாயுடு, தன் கட்சியைச் சேர்ந்த இரண்டு மத்திய அமைச்சர்கள் ராஜினாமா செய்வார்கள் என்றும் அறிவித்தார்.

 

Nitish

 

இதுவொரு புறமிருக்க, கடந்த ஆண்டு மே மாதத்தில் இருந்தே பீகார் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கவேண்டும் என்று கோரிக்கை விடுத்துவரும் அம்மாநில முதல்வர் நிதீஷ்குமார், மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுப்பார் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. 

 

இதுகுறித்து ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் மூத்த தலைவர் கே.சி.தியாகி, ‘சிறப்பு அந்தஸ்து வழங்காவிட்டால் பீகாரால் செயல்பட முடியாது. ஆந்திரப்பிரதேசத்தின் கோரிக்கையை ஆதரிக்கிறோம். பீகார் தனியாக பிரிக்கப்பட்டபோது எப்படி இருந்ததோ, அதே நிலையில்தான் இப்போது ஆந்திரப்பிரதேசம் இருக்கிறது. எல்லா வளங்களும் தெலுங்கானாவிடம் சென்றுவிட்டன’ என தெரிவித்துள்ளார்.

 

ஆந்திரப்பிரதேசத்தின் கோரிக்கை குறித்து மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி, ‘கூடுதல் நிதி உதவி வழங்கலாம். அது அந்த மாநிலத்திற்கு உதவியாக இருக்கும். ஆனால், சிறப்பு அந்தஸ்து குறித்து நினைத்துக்கூட பார்க்கமுடியாது’ என தெரிவித்திருந்தார். தொடர்ந்து சிறப்பு அந்தஸ்து கோரிவந்த பீகார் முதல்வர் நிதீஷ்குமார், இம்முறை அதை இன்னும் வலுவாக மேற்கொள்வார் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

சார்ந்த செய்திகள்