காவிரி நதி நீர் பங்கீடு வழக்கில் உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா இன்று காலை 10.30 மணியளவில் தீர்ப்பு வழங்க இருக்கிறார். காவிரி வழக்கில் இன்று தீர்ப்பு வெளியாவதால் தமிழகம், கர்நாடகாவில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
காவிரி நதி நீர் நீர் பங்கீடு பிரச்னை தொடர்பாக கடந்த 2007ம் ஆண்டு காவிரி நடுவர் மன்றம் அளித்த இறுதித் தீர்ப்பை எதிர்த்து தமிழகம், கர்நாடகம், கேரளம் ஆகிய மாநிலங்கள் உச்சநீதிமன்றத்தில் தனித்தனியே மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்தன. இந்த மனுக்கள் மீதான இறுதிக்கட்ட வாதம் தலைமை நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, அமிதவராய், ஏ.எம்.கன்வில்கர் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு கடந்த ஆண்டு ஜூலை மாதம் 11-ம் தேதி தொடங்கியது. செப்டம்பர் 20-ம் தேதி வாதங்கள் முடிவடைந்த பின்னர், தீர்ப்பு ஒத்திவைக்கப்படுவதாக நீதிபதிகள் அறிவித்தனர்.
இவ்வழக்கு விசாரணையின் போது நடுவர் மன்ற உத்தரவுப்படி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என நீதிபதிகள் மத்திய அரசுக்கு உத்தரவிட்டனர். ஆனால், மத்திய அரசு அமைக்க மறுத்துவிட்டது. விசாரணையின் இடையே, தமிழகத்திற்கு தண்ணீர் திறக்கக்கோரி பல இடைக்கால உத்தரவுகளை நீதிபதிகள் பிறப்பித்தாலும், கர்நாடக அரசு அதனை கண்டுகொள்ளவில்லை.
இந்நிலையில், இறுதி வாதங்கள் முடிந்த நிலையில் இன்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்குகிறது. இந்த தீர்ப்பை தமிழக விவசாயிகள் ஆவலோடு எதிர்பார்த்து உள்ளனர். இன்று காலை 10.30 மணிக்கு தீர்ப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதனிடையே, தீர்ப்பு வெளியான பின்னர், இரு மாநிலங்களிலும் சட்டம், ஒழுங்கு பிரச்சனை ஏற்படாமல் தடுக்கும் வண்ணம் காவல் துறை உயரதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
Published on 16/02/2018 | Edited on 16/02/2018