டின்.பி.எஸ்.சி. செக்சன் ஆஃபிசர் காசிராம்குமார் அதிரடியாக கைது செய்யப்பட்டது துணை கலெக்டர்கள், டி.எஸ்.பி.கள் உள்ளிட்ட தமிழக அரசு அதிகாரிகள் மட்டுமல்ல ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். உள்ளிட்ட அதிகாரிகள் மத்தியிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய (Tamil Nadu Public Service Commission) குரூப்-1 தேர்வுகளில் முறைகேடுகள் நடப்பதாக சத்யம் தொலைக்காட்சியில் செய்தி வெளியானது. இதனைத்தொடர்ந்து, திருநங்கை ஸ்வப்னா கார்த்திக் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். நக்கீரனிலும் யார் யார் முறைகேடுகளில் ஈடுபட்டார்கள் என்ற ஏ டூ செட் தகவல்கள் தொடர்ந்து வெளியாகின. இந்நிலையில், ‘2016-ல் நடந்த டி.என்.பி.எஸ்.சி. குரூப்-1 தேர்வில் தேர்ச்சி பெற்ற 74 பேரில் 62 பேர் ஒரு குறிப்பிட்ட பயிற்சி மையத்தில் தேர்ச்சி பெற்றது எப்படி? என்று உயர்நீதிமன்றத்தில் விவாதிக்கப்பட்டு அது தொடர்பாக விசாரணை மேற்கொள்ளவேண்டும்’என்று டி.என்.பி.எஸ்.சி. முறைகேடுகள் குறித்து நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் விசாரிக்க உத்தரவிட்டார்.
சென்னை மாநகர கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன், மத்திய குற்றப்பிரிவு கூடுதல் கமிஷனர் கணேச மூர்த்தி, துணை கமிஷனர் மல்லிகா, கூடுதல் துணை கமிஷனர் ஷ்யாமளா தேவி, உதவி கமிஷனர் மகேஸ்வரி, இன்ஸ்பெக்டர் செங்குட்டவன் உள்ளிட்ட காக்கி டீம் அதிரடி விசாரணையில் ஈடுபட்டது.
டி.என்.பி.எஸ்.சி. குரூப்-1 வினாத்தாள்களை குறிப்பிட்ட தனியார் பயிற்சி மையங்களுக்கு முன்கூட்டியே விற்றுவிடுவது, பணம் கொடுக்கும் மாணவர்களின் விடைத்தாள்களை எடுத்து விடைகளை நிரப்புவது உள்ளிட்ட பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்ட செக்ஷன் ஆஃபிசர் சிவசங்கர், லஞ்சம் கொடுத்த ராம்குமார், அவரது நண்பன் குமரேசன், அசிஸ்டெண்ட் செக்ஷன் ஆஃபிசர் பெருமாள், காண்டிராக்டர் பால்ராஜ், செக்ஷன் ஆஃபிசர் புகழேந்தி உள்ளிட்டவர்களை அதிரடியாக கைது விசாரணை நடத்திவந்தது.
இந்நிலையில், நக்கீரனில் ஏற்கனவே எழுதப்பட்டதுபோல செக்ஷன் ஆஃபிசர் காசி ராம்குமாருக்கும் தொடர்பு இருப்பதாக கடந்த 26 ந்தேதி கைது செய்திருக்கிறது மத்திய குற்றப்பிரிவு காவல்துறை. செக்ஷன் ஆஃபிசர் ராம்குமாருக்கும் டி.என்.பி.எஸ்.சி. தேர்வில் அதிக ரிசல்ட் காண்பித்த குறிப்பிட்ட தனியார் பயிற்சி மையத்திற்கும் தொடர்பு இருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. அதனால், அடுத்தடுத்து தனியார் பயிற்சிமைய உரிமையாளர்கள் கைது செய்ய இருப்பதால், பணம் கொடுத்து முறைகேடாக தேர்ச்சி பெற்ற துணை கலெக்டர்கள், டி.எஸ்.பி.கள் இவர்களுக்கு துணையாக இருந்த ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்.களும் கலக்கத்தில் இருக்கிறார்கள். தற்போது, வழக்கு தனி நீதிபதியிடமிருந்து இரண்டுபேர் கொண்ட அமர்வுக்கு மாறியுள்ளது.
விசாரணை டீமிலுள்ள ஏ.டி.சி. ஷ்யாமளா தேவி புரமோஷனில் செல்கிறார். டி.சி. மல்லிகா, ஏ.சி. மகேஸ்வரி, இன்ஸ்பெக்டர் செங்குட்டவன் ஆகியோரை ட்ரான்ஸ்ஃபர் செய்துவிட்டால் விசாரணை மற்றும் கைதிலிருந்து தப்பித்துவிடலாம் என்று திட்டம் தீட்டிக்கொண்டிருக்கிறார்கள் ‘ரமணா’ ஸ்டைலில் முறைகேட்டில் ஈடுபட்டவர்கள். பல்வேறு, நெருக்கடிகளில் தீர (ன்) விசாரித்துக்கொண்டிருக்கும் மத்திய குற்றப்பிரிவு காக்கிகளின் விசாரணை தொடரவேண்டும் என்பதே குரூப்-1 தேர்வில் நேர்மையாக படித்து பதவியை பிடித்த; பதவி கிடைக்காத மாணவர்களின் கோரிக்கையாக உள்ளது.