மெரினா அருகே ஈழத்தமிழர்கள் நினைவேந்தல் பேரணியில் பங்கேற்ற வைகோ, திருமுருகன் காந்தி, தெகலான்பாகவி கைது செய்யப்பட்டனர். இப்பேரணியில் பங்கேற்ற மக்களும் கைது செய்யப்பட்டனர். கைதான இவர்கள் அனைவரும் எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் தங்க வைக்க அழைத்துச் செல்லப்பட்டனர்.
மெரினா கடற்கரையில் இலங்கையில் நடந்த இனப்படுகொலை சம்பவத்தை நினைவுகூரும் வகையில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்ச்சி நடத்த காவல்துறை அனுமதி மறுத்ததால், திருவல்லிக்கேணி பாரதிசாலையில் நினைவேந்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. நினைவேந்தல் நிகழ்ச்சி நடைபெறும் பாரதி சாலையில் போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டது.
நினைவேந்தல் நிகழ்வில் பாரதி சாலையில் இருந்து கண்ணகி சிலை வரை பேரணியாக சென்றனர். இப்பேரணியில் ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்றனர். பேரணியில் வைகோ, திருமுருகன் காந்தி, தெகலான்பாகவி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றனர்.
தடையை மீறி கூட்டம் கூடாமல் இருக்க முன்னெச்சரிக்கையாக மெரினா, சேப்பாக்கம் பகுதிகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது. இந்நிலையில், பேரணியாக சென்றவர்கள் கண்ணகி சிலையை தாண்டி மெரினாவில் நுழைய முயன்றனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். இதையடுத்து , நினைவேந்தல் நிகழ்வில் பங்கேற்றவர்கள் அனைவரையும் காவல்துறை வாகனங்களில் ஏறவேண்டும் என்று போலீசார் ஒலிப்பெருக்கியில் அறிவிப்பு செய்தனர். இதன்பின்னர் அனைவரும் ஈழத்துக்கு ஆதரவான முழக்கங்களோடு காவல்துறை வாகனங்களில் ஏறினர். எல்லோரும் கைதான பின்னரே தான் கைதாவேன் என்று வைகோ போலீசாருடன் வாக்குவாதம் செய்தார். இதன்பின்னர் அனைவரும் கைதானதும் வைகோவும் கைதானார். இவர்கள் அனைவரையும் எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் தங்க வைத்தனர் போலீசார்.
சில மணி நேரம் கழித்து கைதான அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.