இன்றுடன் ஓய்வுபெற இருக்கும் நீதிபதி செல்லமேஸ்வர், உச்சநீதிமன்ற மரபினை நிராகரிப்பாரா என்ற கேள்விகள் எழுந்துள்ளன.
நீதிபதி ஜஸ்டி செல்லமேஸ்வர் கடந்த ஏழு ஆண்டுகளாக உச்சநீதிமன்றத்தில் நீதிபதியாக பணிபுரிந்து வருகிறார். இவரது பதவிக்காலம் வருகிற ஜூன் 22ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. ஆனால், உச்சநீதிமன்ற கோடைக்கால விடுமுறை அறிவிக்கப்பட உள்ளதால், இன்றே அவர் ஓய்வுபெற இருக்கிறார்.
முன்னதாக பணிஓய்வு பெற இருக்கும் தனக்கு உச்சநீதிமன்ற பார் அசோசியேஷன் வழங்கிய பிரியாவிடை நிகழ்ச்சியையும் நிராகரித்தார். தனது ஓய்வு என்பது தனிப்பட்ட விவகாரமாக இருக்கவேண்டும் என்ற கோரிக்கையை இதற்காக முன்வைத்தார்.
இந்நிலையில், நீதிபதி செல்லமேஸ்வர் தனது கடைசி நாளான இன்று தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவுடனான அமர்வில் இடம்பெறுவாரா என்ற கேள்விகள் எழுந்தன. உச்சநீதிமன்றத்தில் பணியாற்றி ஓய்வுபெறும் நீதிபதி தனது கடைசி நாளில் தலைமை நீதிபதியின் அமர்வில் இடம்பெறுவார் என்பது மரபு. இதைக் கட்டாயமாக்கும் எந்தவித சட்டமும் இல்லாததால், நீதிபதி செல்லமேஸ்வர் இன்று நீதிபதி சஞ்சய் கிஷான் கவுலின் அமர்வில் இடம்பெறுவார் என்ற செய்திகள் பரவின. ஆனால், அந்த செய்தியைப் பொய்யாக்கும் விதமாக நீதிபதி செல்லமேஸ்வர் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவின் அமர்வில் இடம்பெறுவார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
நீதிபதி செல்லமேஸ்வர் உச்சநீதிமன்ற நீதிபதிகள் பணிவழங்கும் விவகாரத்தில் தலைமை நீதிபதியின் தலையீடு இருப்பதாக குற்றம்சாட்டி இருந்தது குறிப்பிடத்தக்கது.