Skip to main content

விண்வெளி குப்பையாகுமா ஜிசாட் - 6ஏ? இஸ்ரோவின் அடுத்த நகர்வு என்ன?

Published on 03/04/2018 | Edited on 03/04/2018

ஜிசாட் - 6A செயற்கைக்கோளை ஏந்திக்கொண்டு ஜி.எஸ்.எல்.வி. - எஃப் 08 ராக்கெட் கடந்த 29ஆம் தேதி சதீஷ் தவான் விண்வெளி ஏவுதளத்தில் இருந்து விண்ணில் ஏவப்பட்டது. 

 

GSLV

 

இந்த செயற்கைக்கோள் சுற்றுவட்டப்பாதையை அடைந்தவுடன், புரொபல்ஷன் கொடுப்பதற்கான முதல் நிலை பற்றிய தகவலை சனிக்கிழமை காலை 9.22 மணிக்கு இஸ்ரோ வெளியிட்டது. பொதுவாக விண்வெளியில் சுற்றுவட்டப்பாதையை அடைந்தவுடன் வேகம் பெறுவதற்காக சிறு புரொபல்ஷன் கொடுக்கப்படும். இதற்கான இரண்டாம் நிலை புரொபல்ஷன் பற்றிய தகவல்களை இஸ்ரோ வெளியிடவில்லை.

 

தொடர்ச்சியாக ஜிசாட் - 6ஏ செயற்கைக்கோள் உடனான தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ள நிலையில், அது நீடிக்கும்பட்சத்தில் விண்வெளிக் குப்பையாகும் வாய்ப்பு உள்ளதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். மேலும். சுற்றுவட்டப்பாதையை அடைந்தவுடன் பூமியைச் சுற்றிவருவதற்காக கொடுக்கப்படும் புரொபல்ஷன் எரிவாயுவுடன் அது விண்ணில் பறந்துகொண்டிருக்கும் என்றும் கூறியுள்ளனர். 

 

அதேபோல், ‘பொதுவாக செயற்கைக்கோள்களில் சோலார் மின்கலங்கள் இருக்கும். ஆனால், விண்வெளிக்கு சென்றவுடன் சோலார் மூலம் மின்கலங்கள் சக்தி பெறாது என்பதால், பூமியில் இருக்கும்போதே முழுமையான சக்தியுடன் அனுப்பப்பட்டிருக்கும். இருந்தாலும், அதில் குறுக்கு சுற்றில் (Short circuit) குளறுபடி ஏற்பட்டிருப்பதுதான் மொத்த பிரச்சனைக்கும் காரணம்’ என தெரிவித்துள்ளனர்.

 

விண்வெளிக்கு அனுப்பப்படும் செயற்கைக்கோள்கள் தொலைந்துபோவது இது முதன்முறையல்ல. இன்சாட் - 1ஏ, இன்சாட் - 1சி, இன்சாட் -2டி ஆகியவையும் இந்த பிரச்சனையைச் சந்தித்துள்ளன. இன்சாட் -2டி 1997ஆம் ஆண்டு ஜூலை மாதம் தொலைந்துபோய், அக்டோபர் மாதம்தான் மீண்டும் தொடர்புக்கு வந்தது. ஆக, இஸ்ரோ விடாமல் முயற்சி செய்துகொண்டிருந்தால் ஜிசாட் - 6ஏ மீண்டும் தொடர்புக்கு வரலாம் என்றே நம்பலாம்.

சார்ந்த செய்திகள்

Next Story

‘இன்சாட் - 3 டி.எஸ்.’ செயற்கைக்கோள் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது!

Published on 17/02/2024 | Edited on 17/02/2024
'Insat - 3DS' satellite successfully launched

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ), வானிலை மற்றும் பேரிடர் எச்சரிக்கை தகவல்களை முன்கூட்டியே பெறுவதற்காக ‘இன்சாட் - 3டிஎஸ்’ என்ற செயற்கைக்கோளை வடிவமைத்துள்ளது. இதனை ஆந்திரா மாநிலம் நெல்லூர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து ஜி.எஸ்.எல்.வி எப்-14 ராக்கெட் விண்ணில் பாய்வதற்கான கவுண்ட் டவுன் நேற்று (16-02-24) பகல் 2 மணி 05 நிமிடத்தில் தொடங்கியது. மேலும், இந்த ராக்கெட் இன்று மாலை 5.35 மணிக்கு விண்ணில் செலுத்தவுள்ளதாக இஸ்ரோ தெரிவித்திருந்தது.

இந்த நிலையில், வானிலை ஆய்வுக்கான அதிநவீன இன்சாட்-3டிஎஸ் (INSAT-3DS) செயற்கைக்கோளுடன் ஜிஎஸ்எல்வி - எப் 14 ராக்கெட் இன்று (17-02-24) மாலை 5:35 மணிக்கு வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. அதிநவீன தொழில்நுட்பத்தில் உருவான வானிலை செயற்கைக்கோளை சுமந்து செல்லும் ஜி.எஸ்.எல்.வி எப் -14 ராக்கெட் சுமார் 420 டன் எடை கொண்டதாகும். 

2,274 கிலோ எடையுடன் 6 சேனல் இமேஜர் உட்பட 25 விதமான ஆய்வுக் கருவிகளுடன் வடிவமைக்கப்பட்டுள்ள இன்சாட்-3டிஎஸ் செயற்கைக்கோள் மூலம் வானிலை மாற்றத்தை துல்லியமாகக் கண்டறிய முடியும் என்று இஸ்ரோ தெரிவித்துள்ளது. 

Next Story

வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது ஜி.எஸ்.எல்.வி-3! 

Published on 23/10/2022 | Edited on 23/10/2022

 

GSLV-3 successfully launched!

 

இங்கிலாந்து நாட்டை சேர்ந்த 6 டன் எடையுள்ள 36 செயற்கைகோள்களுடன், ஜி.எஸ்.எல்.வி.-3 ராக்கெட் விண்ணில் பாய்ந்தது. 

 

உலக முன்னணி தொலைத் தொடர்பு நிறுவனங்களில் ஒன்றான பிரிட்டனின் ஒன் வெப் நிறுவனம், வணிக பயன்பாட்டிற்காக 5,400 கிலோ எடை கொண்ட 36 செயற்கைக் கோள்களை விண்ணில் செலுத்துகிறது. ஒன் வெப் மற்றும் இஸ்ரோவின் புரிந்துணர்வு ஒப்பந்தங்களின் அடிப்படையில் அந்த செயற்கைக் கோள்கள் இஸ்ரோவின் ஜி.எஸ்.எல்.வி.-3 ராக்கெட் மூலம், ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரி கோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் இரண்டாவது ஏவுதளத்திலிருந்து அதிகாலை 12.07 மணிக்கு ஜி.எஸ்.எல்.வி.-3 ராக்கெட் விண்ணில் செலுத்தப்பட்டது. 

 

முழுவதும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட ஜி.எஸ்.எல்.வி.-3 ராக்கெட் சுமார் 640 டன் எடை கொண்டது. இந்தவகை ராக்கெட் திட, திரவ மற்றும் கிரையோஜெனிக் எந்திரங்களால் இயக்கப்படும் 3-நிலைகளை கொண்ட ராக்கெட்டாகும். வணிக ஏவுதல் மூலம் முதல் முறையாக இந்திய ராக்கெட் சுமார் 6 டன் எடையுள்ள செயற்கைகோள்களை சுமந்து செல்கிறது. 

 

இங்கிலாந்து நாட்டை சேர்ந்த ஒன்வெப் நிறுவனத்தின் 36 செயற்கைகோள்களை முதல் முறையாக இஸ்ரோ விண்ணில் ஏவி உள்ளது. இந்த செயற்கைகோள்கள் குறைந்த புவி சுற்றுப்பாதையில் நிலை நிறுத்தப்பட உள்ளது. ஒன்வெப் நிறுவனமானது உலக நாடுகளுக்கு அதிவேக இணையதள சேவையை வழங்குவதற்காக செயற்கைகோள்களை விண்ணில் ஏவி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.