தமிழக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், கன்னியாகுமரி மக்களவை தொகுதி காங்கிரஸ் உறுப்பினருமான எச்.வசந்தகுமார் சென்னையில் காலமானார்.
வசந்தகுமார் உடல் பாதுகாப்பு உடைகள் அணிவிக்கப்பட்டு, கண்ணாடி பெட்டிக்குள் வைக்கப்பட்டு பாதுகாப்பாக வேன் மூலம் தி.நகரில் உள்ள அவரது இல்லத்திற்கு கொண்டு வரப்பட்டது. அங்கு அவரது உடலுக்கு அவரது நிறுவன ஊழியர்கள், தி.நகர் வியாபாரிகள், தொழிலாளர்கள் என பலரும் அஞ்சலி செலுத்தினர்.
தி.நகர் நடேசன் தெருவில் உள்ள இல்லத்தில் வைக்கப்பட்ட வசந்தகுமார் உடலுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி அஞ்சலி செலுத்தினார். காங்கிரஸ் கொடி போர்த்தப்பட்ட வசந்தகுமார் உடலை பார்த்து அப்போது அவர் கண்ணீர் விட்டு கதறி அழுதார்.
முன்னதாக ஆகஸ்ட் 28ஆம் தேதி கே.எஸ்.அழகிரி வெளியிட்டிருந்த இரங்கல் செய்தியில்,
தமிழக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், கன்னியாகுமரி மக்களவை தொகுதி காங்கிரஸ் உறுப்பினருமான திரு எச்.வசந்தகுமார் அவர்கள் காலமான செய்தி கேட்டு கடும் அதிர்ச்சிக்கும், துயரத்திற்கும் ஆளாகியிருக்கிறேன். அருமை நண்பர் வசந்தகுமார் மறைவு காங்கிரஸ் கட்சிக்கு மட்டுமல்ல, தமிழகத்திற்கே பேரிழப்பாகும். பாரம்பரியமிக்க காங்கிரஸ் குடும்பத்தின் வழி வந்த அவர் இளமை பருவம் முதல் காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சிக்காக தம்மையே முழுமையாக அர்பணித்துக்கொண்டவர்.
கடந்த 40 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு தனியார் நிறுவனத்தில் விற்பனையாளராக பணியில் சேர்ந்து, தொழில் நுணுக்கங்களை கற்று வசந்த் அன் கோ என்ற நிறுவனத்தை நிறுவி இன்று 82 கிளைகளுடன் விரிவுபடுத்தி தொழில் செய்து வருகிற ஆற்றல்மிக்கவராக அவர் விளங்கினார். மிகப்பெரிய தொழிலதிபராக இருந்தாலும் தமது முழு நேரத்தையும் காங்கிரஸ் இயக்கத்தின் மூலமாக மக்கள் தொண்டாற்றுவதற்காக செலவிட்டவர் திரு வசந்தகுமார்.
நாங்குநேரி சட்டமன்ற உறுப்பினராக இரு முறையும், கன்னியாகுமரி மக்களவை தொகுதியில் போட்டியிட்டு மக்களின் அமோக ஆதரவுடன் வெற்றி பெற்றவர். தமக்கு வாக்களித்த மக்களுக்கு கொரோனா தொற்று காலத்திலும் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவிகள் செய்வதற்காக தொகுதி முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டவர். கொரோனா தொற்று தம்மையும் பாதிக்கும் என்பது குறித்து கடுகளவும் அச்சம் கொள்ளாமல் மக்கள் நலப்பணியில் ஈடுபட்டதன் விளைவாக அதே கொரோனா நோயினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இன்று நம்மிடமிருந்து பறிக்கப்பட்டிருக்கிறார். அவரது மறைவு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும்.
திரு எச்.வசந்தகுமார் அவர்களுடைய மறைவின் மூலம் தமிழக காங்கிரஸின் ஒரு தூண் சாய்ந்து விட்டது. எப்போதும் சிரித்த முகத்துடன் இயக்கப்பணி ஆற்றிவந்த அவர், என் மீது அளவற்ற அன்புகொண்டிருந்த என் உடன்பிறவா சகோதரரை நான் இழந்திருக்கிறேன். நானே மிக கடுமையான துக்கத்தில் இருக்கிறபோது யாருக்கு என்னால் என்ன ஆறுதல் கூறமுடியும்!
தமிழக காங்கிரஸின் அப்பழுக்கற்ற முன்னணி தலைவர்களில் ஒருவரான திரு எச்.வசந்தகுமார் அவர்களது மறைவினால் வாடும் அவரது குடும்பத்தினருக்கும், காங்கிரஸ் நண்பர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் கனத்த இதயத்துடன் தெரிவித்துக்கொள்கிறேன். அவரது மறைவிற்கு அஞ்சலி செலுத்தும் வகையில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி ஒரு வாரம் துக்கம் கடைபிடிப்பதோடு, கட்சி நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்துசெய்யப்படுவதோடு, கட்சியின் கொடிகள் அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும் என கூறியிருந்தார்.
படங்கள்: அசோக்குமார், குமரேஷ்