தூத்துக்குடியில் காவல்துறையின் துப்பாக்கிச்சூட்டினால் படுகொலை செய்யப்பட்டவர்களின் உறவினர்களையும், படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களையும் திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.
அதனைத்தொடர்ந்து, செய்தியாளர்களை சந்தித்த அவர்,
கடந்த இரு தினங்களாக தூத்துக்குடி மாநகரம் மிகப்பெரிய அமளிக்காடாக மாறியுள்ளது. துப்பாக்கிச்சூட்டில் மரணமடைந்தவர்களின் குடும்பங்கள் சோகத்தில் தவித்து வருகின்றன. நியாயமாக, தமிழ்நாட்டின் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், அமைச்சர்களும் தூத்துக்குடிக்கு நேரில் வந்து, ஸ்டெர்லைட் ஆலை நிரந்தரமாக மூடப்படும் என்ற செய்தியை சொன்னால்தான், இங்கு அமைதி ஏற்படும் சூழல் இருக்கிறது. ஆனால், இதுபற்றியெல்லாம் கவலைப்படாமல், தங்களுடைய பதவிகள் இருந்தால் மட்டும் போதும் என்ற நிலையில் எடப்பாடி பழனிசாமியும், அவரோடு இருக்கின்ற அமைச்சர்களும் கருதிக் கொண்டு இருக்கிறார்கள். இங்கு நேரடியாக வந்து உரிய நடவடிக்கைகளை எடுக்க முன்வராத முதலமைச்சரும், அமைச்சர்களும், காவல்துறை டி.ஜி.பி.யும் அந்தப் பொறுப்புகளில் இருப்பதற்கே லாயக்கற்றவர்கள்.
நேற்று நடைபெற்றுள்ள கொடுமையான துப்பாக்கிச்சூட்டில் 12 பேர் இறந்துள்ளனர். இப்போது பாதிக்கப்பட்டவர்களை நான் மருத்துவமனையில் சந்தித்து ஆறுதல் சொல்லிக் கொண்டு இருந்தபோது கூட மீண்டும் துப்பாக்கிச்சூடு நடைபெற்று இருப்பதாக செய்திகள் வந்திருக்கின்றன. இந்த துப்பாக்கிச்சூட்டுக்கு பொறுப்பேற்றுக் கொண்டு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும். அதுமட்டுமல்ல, காட்டுமிராண்டித்தனமாக மக்களை தாக்கியும், துப்பாக்கியால் சுட்டும் சாவின் எல்லைக்கு கொண்டு சென்று கொண்டு இருக்கும் காவல்துறைக்கு தலைமைப் பொறுப்பில் இருக்கின்ற டி.ஜி.பி. ராஜேந்திரன் அவர்களும் பதவி விலக வேண்டும். அதேபோல, இந்த மாவட்டத்தின் ஆட்சித் தலைவர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோரை பணியிடம் மாற்ற உத்திரவிட்டு, புதியவர்களை நியமித்தால் மட்டுமே, இந்த மாவட்டத்தில் சுமுகமான நிலை திரும்பும். அதுமட்டுமின்றி, இந்தப் பகுதியில் ஒரு நல்லிணக்கக் குழுவை அரசே நியமித்து, அந்தக் குழுவின் மூலமாக உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
செய்தியாளர்: தலைமைச் செயலாளரை நீங்கள் சந்தித்தபோது என்ன கூறினார்?
பதில்: முதலமைச்சர் எப்படி எதுபற்றியும் கவலைப்படாமல் அமைதியாக இருக்கிறாரோ, அதேபோல அவரும் அமைதியாக இருந்துகொண்டு, நாங்கள் ஆய்வு நடத்திக் கொண்டிருக்கிறோம், குழு அமைத்திருக்கிறோம் என்று சொன்னாரே தவிர, எந்த நடவடிக்கையும் எடுத்ததாக சொல்லவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.
Published on 23/05/2018 | Edited on 23/05/2018