Skip to main content

“ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன” - சோதனை குறித்து அமலாக்கத்துறை விளக்கம்!

Published on 11/04/2025 | Edited on 11/04/2025

 

ED explains the raid Documents were seized

தமிழக நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என். நேருவின் சகோதரர் கே.என். ரவிச்சந்திரனுக்கு சொந்தமான 10க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறையினர் கடந்த 7ஆம் தேதி (07.04.2025) காலை 6 மணி அளவில் சோதனையைத் தொடங்கினர். அப்போது, அவரது வங்கிக் கணக்கில் அதிக பரிவர்த்தனை காணப்பட்டதால், அதிகாரிகள் இந்த சோதனையைத் தொடங்கியதாகக் கூறப்பட்டது. அந்த வகையில் சென்னையில் உள்ள அடையாறு, தேனாம்பேட்டை, ஆழ்வார்பேட்டை, சி.ஐ.டி. காலனி, பெசன்ட் நகர் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடைபெற்றது.

இந்த சோதனையின் ஒரு பகுதியாக கோவை மசக்காளிபாளையம் பகுதியில் கே.என். ரவிச்சந்திரனுக்கு சொந்தமான கட்டுமான நிறுவனத்திலும், அவரது வீட்டிலும் அமலாக்கத்துறை சோதனை மேற்கொண்டனர். அதேபோல் அமைச்சர் கே.என். நேருவின் மகனும், பெரம்பலூர் நாடாளுமன்ற மக்களவைத் தொகுதியின் எம்.பி.யுமான அருண் நேருவுக்குச் சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறையினர் அதிரடி சோதனை மேற்கொண்டனர். அதே சமயம் திருச்சி தில்லை நகரில் இரு இடங்களில் அமைந்துள்ள அமைச்சர் கே.என். நேருவின் வீடுகளில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தினர்.

இந்த சோதனையின் முடிவில் அமைச்சர் கே.என். நேருவின் வீட்டில் இருந்து அமலாக்கத்துறை அதிகாரிகள் முக்கிய ஆவணங்களை எடுத்துச் சென்றதாகத் தகவல் வெளியாகியிருந்தது. அதே சமயம் கே.என். ரவிச்சந்திரன் வீடுகளில் தொடர்ந்து 2வது நாளாக கடந்த 8ஆம் தேதியும் (08.04.2025) சோதனை நடைபெற்றது. அதோடு சென்னை ஆர்.ஏ. புரத்தில் இருந்த கே.என். ரவிச்சந்திரனை (அவரது இல்லத்தில் இருந்து) அமலாக்கத்துறை அதிகாரிகள், அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு காரில் அழைத்துச் சென்று நடத்தினர். இத்தகைய சூழலில் தான் அவர் இன்றும் (11.04.2025) அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜராக வேண்டி இருந்தது. இருப்பினும் அவருக்கு லேசான நெஞ்சு வலி ஏற்பட்டதன் காரணமாக கே.என். ரவிச்சந்திரன் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்தது.

இந்நிலையில் இந்த சோதனை குறித்து அமலாக்கத்துறை விளக்கம் அளித்துள்ளது. அதில், “சென்னை மண்டல அமலாக்கப் பிரிவு, சென்னை, திருச்சி மற்றும் கோயம்புத்தூர் உள்ளிட்ட இடங்களில் சட்டவிரோத பணப்பரிமாற்ற மோசடி தடுப்புச் சட்டம், 2002 இன் கீழ் (PMLA, 2002) ட்ரூடம் இபிசி இந்தியா பிரைவேட் லிமிடெட் ( Truedom EPC India Pvt Ltd) மற்றும் அதன் முக்கிய பணியாளர்களுடன் தொடர்புடைய 15 வளாகங்களில் 07/04/2025 அன்று சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டது. இந்த சோதனை நடவடிக்கைகளின் போது, ​​பல்வேறு குற்றவியல் ஆவணங்கள், டிஜிட்டல் பதிவுகள் மற்றும் சொத்து ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சார்ந்த செய்திகள்