உலகின் முன்னனி பன்னாட்டு இணையதள மென்பொருள் தொழில்நுட்ப நிறுவனம் தான் கூகுள் நிறுவனம். கலிபோர்னியாவை தலைமையகமாக கொண்டு இயங்கி வரும் இந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக இந்தியாவைச் சேர்ந்த சுந்தர் பிச்சை பொறுப்பு வகித்து வருகிறார்.
இதற்கிடையில், கடந்த 2023ஆம் ஆண்டு ஜனவரி மாதம், கூகுள் நிறுவனம் சர்வதேச அளவில் தனது ஊழியர்களில் 6 சதவீதம் பேரை பணிநீக்கம் செய்தது. அப்போது, இது பேசுபொருளாக அமைந்தது. இந்த பணிநீக்க நடவடிக்கையை தொடர்ந்து, 2024ஆம் ஆண்டிற்கான திட்டங்கள் குறித்து, கூகுள் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை தனது ஊழியர்களுக்கு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது, ‘நிறுவனத்தின் செயல்பாட்டை எளிதாக்குவதற்கான சில அடுக்குகளை நீக்க வேண்டியது காலத்தின் அவசியம். அதனால், இந்த ஆண்டும் பணி நீக்கங்கள் தொடரும். இந்த பணி நீக்க நடவடிக்கைகள் நிறுவனத்தின் செயல்பாட்டை அதிகரிக்கும் வகையில் பல்வேறு துறைகளின் அடுக்குகளை நீக்குவதாக இருக்கும். ஆனால், இந்த பணி நீக்கம் கடந்தாண்டின் அளவிற்கு இருக்காது. அதே போல், இது அனைத்து துறையிலும் இருக்காது” என்று தெரிவித்தார்.
கூகுள் நிறுவனங்களில் கடந்தாண்டு சுமார் 12,000 பேர் பணி நீக்கம் செய்யப்பட்ட நிலையில், இந்த ஆண்டும் பணிநீக்க நடவடிக்கை தொடரும் என்று கூகுள் சி.இ.ஓ சுந்தர் பிச்சை கூறியிருப்பது ஊழியர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.