மற்றொரு நாடு நல்லெண்ண அடிப்படையில் நிதியுதவி வழங்கினால் மத்திய அரசு ஏற்கலாம் என கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ள கேரளாவிற்கு ஐக்கிய அரபு எமிரெட்ஸ் 700 கோடி ரூபாய் நிதியுதவி அளிக்கப்படும் என அறிவித்துள்ளது. ஆனால் இவ்வளவு பெரிய தொகையை ஏற்க மத்திய அரசின் அனுமதி தேவை உள்ளது.
வெளிநாடுகளில் இருந்து யார் நிதி பெற வேண்டும் என்றாலும் இந்திய வெளியுறவு அமைச்சகத்திடம் முறையான அனுமதியை பெற வேண்டியது அவசியமானது. மேலும், வெளிநாடுகள் சார்பில் அளிக்கப்படும் இதுபோன்ற நிதியை பெறுவதற்கு மத்திய அரசின் கொள்கை முடிவும் அவசியமானது. மத்திய அரசு இதற்கு ஒப்புதல் அளித்தால் மட்டுமே கேரள அரசால் இந்த நிதியை பெற்றுக் கொள்ள முடியும்.
இதற்கு முன்பு இயற்கை பேரிடர் நடந்தபோது வெளிநாடுகள் நிதி அளிக்க முன்வந்தது, ஆனால் மத்திய அரசு அதனை ஏற்க மறுப்பு தெரிவித்தது. இப்போது ஐக்கிய அரபு எமிரெட்ஸ் விவகாரத்தில் மத்திய அரசு இன்னமும் முடிவெடுக்கவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் கேரள முதல்வர் பினராயி விஜயன், மற்றொரு நாடு நல்லெண்ண அடிப்படையில் நிதியுதவி வழங்கினால் மத்திய அரசு ஏற்கலாம். வெளிநாட்டு நிதி விவகாரத்தில் தற்போது பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. வெளிநாட்டு நிதியை ஏற்கலாம் என 2016 தேசிய பேரிடர் மேலாண்மை கொள்கையில் உள்ளது என கூறியுள்ளார்.
மேலும், கேரளாவில் மீட்பு, நிவாரணப் பணிகளில் ஈடுபட்ட ராணுவ வீரர்கள், பேரிடர் மீட்புப் படை உள்ளிட்ட வீரர்களுக்கு ஆக.26ல் நன்றி தெரிவிக்கும் விழா நடைபெறும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.