Skip to main content

ஈரோடு மாவட்ட எல்லையில் திறக்கப்பட்ட மது கடைகள்....

Published on 04/05/2020 | Edited on 04/05/2020



கரோனா வைரஸ் தொற்று காரணமாக கடந்த 42 நாட்கள் இந்தியா ஊரடங்கு என்ற அறிவிப்பால் முடங்கி விட்ட நிலையில் குடிமகன்களின் வாழ்வில் இடியாய் விழுந்தது இந்தியா முழுக்க மூடப்பட்ட மது கடைகள்தான். 


இந்த நிலையில் நான்காவது ஊரடங்கு வருகிற மே-17 வரை உள்ள நிலையில் சில மாநிலங்களில் இன்று முதல் மதுக்கடைகள் திறக்கப்பட்டது. இதனால் பூட்டிய விலங்குகள் உடைக்கப்பட்டதுபோல் மது பிரியர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். தமிழகத்தில் டாஸ்மாக் எப்போது திறக்கப்படும் என்ற ஏக்கம் குடிமகன்கள் மத்தியில் ஒரே சிந்தனையாக இருக்கும் பட்சத்தில் தமிழகத்தின் அண்டை மாநிலங்களான கர்நாடகாவும், ஆந்திராவும் இன்று மதுக்கடைகளை திறந்து விட்டது. 

தமிழக கர்நாடக எல்லை பகுதி ஈரோடு மாவட்டம்  சத்தியமங்கலம் மலைப்பகுதியில் உள்ளது. இங்கு பண்ணாரி சோதனை சாவடியை கடந்து சென்றால் ஆசனூர் மலை கிராமம் வரும். அதை தொடர்ந்து வழியில் கர்நாடகாவில் உள்ள புளுஞ்சூர் மற்றும் எல்லகடை என்ற இரண்டு ஊர்களில் கர்நாடகா மதுக் கடைகள் திறக்கப்பட்டுவிட்டது. 

சத்தியமங்கலத்தில் இருந்து தாளவாடி செல்ல வேண்டுமென்றால் கர்நாடகா எல்லையில் உள்ள இந்த இரண்டு மதுக்கடைகளையும் கடந்துதான் மீண்டும் தமிழக எல்லை தொடங்கும் தாளவாடிக்கு செல்ல முடியும். இன்று இந்த மதுக்கடைகள் திறப்பால் எல்லையில் உள்ள மக்கள்  மது வகைகளை வாங்கி சென்றனர். மேலும் கர்நாடகா "சரக்கு" தமிழகத்தில் ஊடுருவி விடக்கூடாது என தமிழக எல்லையில் மதுவிலக்கு போலீசார் தீவிர கண்காணிப்பில் உள்ளார்கள். மலைப்பகுதியில் வசிக்கும் தமிழக மலைக்கிராம மக்களுக்கு கர்நாடக மதுக்கடைகள் அவர்களது தேவையை நிறைவேற்றுகிறது என்கிறார்கள் மலைவாசிகள்.
 

 

 

சார்ந்த செய்திகள்