போலி இ.பாஸ் அச்சடித்து மகாராஷ்ட்ரா மாநிலத்தின் தாராவியில் இருந்து தேனிக்கு பயணிகளை ஏற்றிவந்த இரண்டு ஆம்னி பஸ்களை தேனி போலீசார் பறிமுதல் செய்தனர். அதோடு நான்கு பேர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்.
தேனி மாவட்டத்தில் உள்ள ஆண்டிபட்டி கணவாய் சோதனைச் சாவடியில் வாகன சோதனையில் போலீசார் ஈடுபட்டிருந்தனர். அப்போது மதுரையில் இருந்து இரண்டு ஆம்னி பஸ்கள், தேனி நோக்கி வந்துகொண்டிருந்தது. பஸ்ஸை மறித்த போலீசார் விசாரித்துள்ளனர். அப்போது மகாராஷ்ட்ரா மாநிலம், தாராவியில் இருந்து பயணிகளை ஏற்றி வருவதாகவும், இதற்குத் தமிழ்நாடு அரசின் இ.பாஸ் வைத்துள்ளதாகவும் டிரைவர்கள் கூறியுள்ளனர்.
அவர்களிடம் இருந்த இ.பாஸை பெற்ற போலீசார் அதனைச் சோதித்து பார்த்துள்ளனர். அப்போது அந்த பாஸ் போலியானது எனத் தெரியவந்தது. அதன் அடிப்படையில் பேருந்தைப் பறிமுதல் செய்து ஆண்டிபட்டி காவல் நிலையத்திற்குக் கொண்டு வந்தனர். அதைத் தொடர்ந்து பேருந்து உரிமையாளர், டிரைவர்கள் என நான்கு பேர் கைது செய்யப்பட்டனர்.
இது தொடர்பாக போலீசார் கூறும்போது, போலி இ.பாஸ் அடித்து பயணித்துள்ளனர். இரண்டு பேருந்துகளையும் பறிமுதல் செய்துள்ளோம். பேருந்தில் இருந்த 30 பயணிகள், கரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். பின்னர் தனிமைப்படுத்தல் முகாமிற்கு அனுப்பப்பட்டனர். பேருந்தின் உரிமையாளர் சண்முகநாதன், மேலாளர் செந்தில்குமரன், டிரைவர்கள் ராமையா, பிச்சைமணி ஆகிய நால்வரைக் கைது செய்துள்ளோம். ஏற்கனவே இதுபோன்ற ஒரு மோசடியில் ஈடுபட்டு மகாராஷ்ட்ரா முதல் தேனி வந்திருப்பதாகத் தெரிய வந்துள்ளது. அது தொடர்பாக விசாரணை நடக்கிறது என்று கூறினார்கள்.
வெளி மாநிலங்களில் இருந்து வருபவர்களால் தான் தேனியில் நாளுக்கு நாள் கரோனா அதிகரித்து வருகிறது. இந்நிலையில் முறைகேடாக, போலி இ.பாஸ் மூலம் வெளிமாநிலங்களில் இருந்து ஆட்களை ஏற்றி வந்து தேனியில் இறக்கி விடும் கும்பல் தற்போது கைதாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.