தமிழ் உள்ளிட்ட 80 மொழிகளை உள்ளடக்கிய திராவிட மொழிக்குழு, 4 ஆயிரத்து 500 ஆண்டுகள் பழைமையானது என சர்வதேச ஆய்வுக்குழு தெரிவித்துள்ளது.
ஜெர்மனியைச் சேர்ந்த மனித வரலாற்றுக்கான அறிவியல் நிறுவனமான மேக்ஸ் பிளான்க்கைச் சேர்ந்த வரலாற்று ஆய்வாளர்கள் மற்றும் டேராடூனைச் சேர்ந்த வனஉயிரிகள் நிலையத்தைச் சேர்ந்த ஆய்வாளர்கள் அடங்கிய சர்வதேச குழு ஒன்று ஆய்வு ஒன்றை நடத்தியது. இந்த ஆய்வு முடிவுகளை ‘ராயல் சொசைட்டி ஆஃப் ஓப்பன் சயின்ஸ்’ என்ற இதழில் வெளியிட்டுள்ளது அந்தக் குழு.
அதன்படி, தெற்காசியாவில் ஆஃப்கானிஸ்தானின் மேற்கு மற்றும் வங்காளதேசத்தின் கிழக்கில் 600 மொழிகளை உள்ளடக்கிய பகுதியில் ஆறு மிகப்பெரிய மொழிக்குடும்பங்கள் இருந்துள்ளன. அதிலும் குறிப்பாக திராவிட மொழிக்குழு சுமார் 80 மொழிகளைக் (வட்டார மொழிகளையும் சேர்த்து) கொண்டுள்ளது. இன்றளவில் சுமார் 22 கோடி மக்களால் அந்த மொழிகள் பேசப்படுகின்றன. இவற்றில் தமிழ், மலையாளம், தெலுங்கு மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் இருந்து இலக்கியத்திற்கான பங்களிப்பு என்பது பல நூற்றாண்டுகளாக இருந்துள்ளது.
அதிலும் குறிப்பாக சமஸ்கிருதத்தைப் போலவே தமிழும் செம்மொழியாக உள்ளது. அதேசமயம், சமஸ்கிருதத்தைப் போல் அல்லாமல், சங்க இலக்கியங்கள் தொட்டு, நவீன இலக்கியங்கள் வரை தமிழ் மொழியின் தொடர்ச்சியானது இருந்துள்ளது.
மேலும், திராவிட மொழியின் புவியியல் தோற்றத்தைக் கணிக்கமுடியவில்லை. திராவிடர்கள் இந்திய தீபகற்பத்தைப் பூர்வீகமாகக் கொண்டவர்கள். அதேபோல், சுமார் 3 ஆயிரத்து 500 ஆண்டுகளுக்கு முன்னர் ஆரியர்கள் இந்தியாவிற்கு வருவதற்கு முன்னரே திராவிடர்கள் இங்கு வாழ்ந்துவந்துள்ளனர். இந்த ஆய்வு முடிவுகள் இதற்கு முந்தைய தொல்லியல் ஆய்வு முடிவுகளுடன் ஒத்துப்போகின்றன என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.